மானாவாரி பூமியில் சொட்டுநீரை பயன்படுத்தி ஒரு ஏக்கரில் கொய்யா, ஒரு ஏக்கரில் கொடிக்காய் பயிரிட்டு லாபம் ஈட்டுகிறார் மதுரை உசிலம்பட்டி அயோத்திபட்டியைச் சேர்ந்த விவசாயி அரசு. இவரது விவசாய அனுபவம் குறித்து பல தகவல்களை கூறியுளீளார்.
மழைநீர் (Rain Water)
எங்கள் பூமி மழைநீரை மட்டுமே நம்பி மானாவாரி பயிர் செய்யும் பூமி. கிணற்று நீரை பயன்படுத்தி சம்பங்கி பயிரிட்டேன். நீர் போதுமானதாக இல்லை. செம்பருத்தி பயிரிட்ட போது நல்ல விளைச்சல் வந்தது. விற்பனையில் சிக்கல் ஏற்பட்டது.
பழப்பயிருக்கு மாறி ஒரு ஏக்கரில் சிகப்பு கொய்யா பயிரிட்டேன். கொய்யா நாற்று வாங்கிய போது கொடிக்காய் மரங்கள் குறைந்த நீரில் வளரும் என்பதை அறிந்தேன். இரண்டு கன்றுகள் வாங்கி வந்தேன். நன்றாக காய்த்தது. இரண்டு மரங்களில் பதியன் மூலம் ஒரு ஏக்கரில் 100 கொடிக்காய் கன்றுகள் பயிரிட்டேன்.
சொட்டுநீர்ப் பாசனம் (Drip Irrigation)
நடும் முன்பு 25 அடி இடைவெளியில் குழிதோண்டி இயற்கை தொழு உரங்களை இட்டு ஒரு மாதம் காய விட்ட பின் நடவு செய்தேன். சொட்டு நீர் மூலம் நீர் பாய்ச்சுகிறேன். ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, மீன் கரைசலை பயன்படுத்துகிறேன். அவ்வப்போது கவாத்து செய்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளில் காய்க்கத் துவங்கியது. டிசம்பரில் பூக்கத் துவங்கி 4 மாதங்கள் காய்க்கும். அடுத்த 8 மாதங்களுக்கு பராமரிப்பு தேவை. கவாத்து செய்த இலைகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம்.
முதல் பருவத்தில் மரத்திற்கு சராசரியாக 5 கிலோ பழங்கள் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் கூடுதலாகும். கிலோ ரூ.200 வரை விலை போகிறது. வியாபாரிகள் ரூ. 100 முதல் 150 வரை தருகின்றனர் என்றார் விவசாயி அரசு.
மேலும் படிக்க