வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல் தற்போது வீட்டுக்கு ஒருவர் Diabetes எனப்படும் நீரழிவுநோயால் பாதிக்கப்படுவது சகஜமாகிவருகிறது.
நாம் எவ்வளவுதான் கவனம் செலுத்தினாலும், பெரும்பாலானோருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு அரிசியை அதிகளவு எடுத்துக்கொள்வதே காரணம் என்பதை மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மருத்துவர்கள் அறிவுரை
உலகில் நீரழிவுநோயாளிகளை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலை விரைவில் மாறவேண்டும் என்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அரிசிக்கு பதிலாக, கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்களும், அறிவுறுத்துகின்றனர்.
பிரத்யேக அரிசி
மக்களின் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவும், தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த விவசாயிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் பிரத்யேக அரிசியை பயிர்வித்து விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து, விருத்தாசலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், ஏரோ ஃபுட் தயாரிப்பாளருமான மணிமொழி (Manimoli) கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள Facebook பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நேரலை நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது 11 விவசாயிகள் சேர்ந்து கடலூர் மாவட்ட உணவுப்பொருள் உற்பத்தியாளர் என்ற சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஏரோ ஃபுட் என்ற பெயரில், (Low Gi Sugar Free Rice RNR 15048) ரக அரிசியை பயிர் செய்து விற்பனை செய்து வருவதாகக் கூறினார். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதே இந்த அரிசியின் சிறப்பு என்றார்.
நெல் கண்டுபிடிப்பு
ஆந்திராவில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் வேளாண் பல்கலைக்கழகம் இந்த நெல் ரகத்தைக் கண்டுபிடித்ததாகவும், அங்கு சிறப்புப் பயிற்சி பெற்று இந்த நெல்விதைகளை வாங்கி வந்து, பயிர் செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த அரிசியில் Low Glycymix Index-ன் அளவு 51 -ஆக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும் என்றார்.
இந்த அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, தோசை மிகவும் மென்மையானதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட மணிமொழி, தற்போது திருத்தணி, திருவள்ளூர் முதல், விழுப்புரம் வரை விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.
குறைந்த விலை
25 கிலோ மூட்டையை மிகக் குறைந்த விலையாக ரூ.1350க்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்த அவர், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், தேவையும் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆந்திராவில் இந்த நெல்லை இருபோகமும் விளைவிக்கும் நிலையில், தமிழகத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான சம்பா பட்டத்தில் மட்டுமே இந்த நெல்லைப் பயிரிடுவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடிவதில்லை என்றார் மணிமொழி.
மதிப்புக் கூட்டுப் பொருட்கள்
மேலும், RNR 15048 ரக அரிசியுடன் சிறுதானியங்களான ராகி, வரகு, கம்பு, கோதுமை உள்ளிட்டவற்றைச் சேர்த்து, இடியாப்ப மாவு, சத்துமாவு, சப்பாத்தி, பூரி மாவு உள்ளிட்ட 10 மதிப்புக் கூட்டுப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், ஈரோட்டில் 300 ஏக்கரில் இவ்வகை நெல் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட மணிமொழி, தாங்கள் விளைவிக்கும் சிறுதானியங்களான வரகு, திணை ஆகியவற்றை ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்வதாகவும் கூறினார்.
ரசாயனக் கலப்பு இல்லை
தங்களுடைய சிறுதானியங்களில், பூச்சி மற்றும் வண்டுகள் வராமல் இருப்பதற்காக, ரசாயனம் மற்றும் தடுப்பு முறைகளைக் கையாள்வது கிடையாது என்று கூறும் மணிமொழி, குறிப்பிட்ட நாட்களுக்குள் இவற்றைப் பயன்படுத்தி பயனடையுமாறும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அரிசியில் 0.2 சதவீதம் மட்டுமே நார்ச்சத்து இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, 7 முதல் 13 சதவீதம் வரை நார்ச்சத்து கொண்ட சிறுதானியங்களை உணவாக்கிக்கொண்டால், நம் முன்னோர்களைப் போன்று நாமும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம் என்றும் யோசனை தெரிவித்தார் மணிமொழி.
இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற 8667249729 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
#FarmertheBrand: மண்ணை பொன்னாக்கும் புதுக்கோட்டைப் பெண்மணி!
சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!