ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான பாங்கி வினீதா என்கிற பழங்குடிப் பெண் மண்ணை அதன் இயற்கையான வடிவத்தில் பராமரித்ததற்காக ஒய்எஸ்ஆர் சாதனை விருதை (YSR Achievement Award) வென்றார். பசுவின் சாணம், சிறுநீர், எருவினை மட்டுமே உரமாக மையப்படுத்தி தங்கள் நிலத்தில் விவசாய நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார்.
அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் டம்ப்ரிகுடா மண்டலத்தில் உள்ள பாலியகுடா கிராமத்தில் வசிக்கும் 32 வயதான பாங்கி வினிதா, நீடித்த மற்றும் இயற்கை விவசாய முறைகளில் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக வேளாண் துறையில் மதிப்புமிக்க ஒய்எஸ்ஆர் சாதனை விருதினை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஒரு விவசாயியாக வினிதாவின் பயணம் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் நிலத்தின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதைக்கு சான்றாகும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத தூய்மையான மற்றும் இயற்கையான மண்ணைப் பராமரிப்பதுதான் பண்ணை தனக்கு வழங்கிய நன்மைகளை திருப்பிச் செலுத்துவதற்கான ஒரே வழி என்று அவர் நம்புகிறார். வினிதாவும் அவரது கணவர் பால கிருஷ்ணாவும், காபி, அனைத்து வகையான காய்கறிகள், மிளகு, ஜாவர், பருப்பு வகைகள் போன்ற பல்வேறு வகையான பயிர்களை பருவகால அடிப்படையில் பயிரிடுகின்றனர்.
வினிதா முன்னணி நாளிதழ் ஒன்றிடம் தெரிவிக்கையில், “இந்த விருது எனக்கான விருதாக மட்டும் கருதவில்லை, இயற்கை மற்றும் நிலையான விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது சமூகத்தின் கூட்டு முயற்சிகளுக்கானதாக கருதுகிறேன்” என்றார்.
பயிர் மகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்த கரிம உரம் மற்றும் நீர்பாசன நுட்பங்களை வலியுறுத்தும் பால கிருஷ்ணா தெரிவிக்கையில், “எந்த ரசாயனங்களையும் பயன்படுத்துவதை நாங்கள் தவிர்க்கிறோம், ஏனெனில் அவை நிலம் மாசுபடுவதற்கு வழிவகுக்கும்.
மேலும் பயிரிடும் பயிர்கள், எங்களின் சொந்த நலனுக்காகவும் என்பதால் அதில் மிகுந்த கவனமாக உள்ளோம். எங்கள் விவசாய நடைமுறையானது, முதன்மையாக பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து பெறப்பட்ட பண்ணை எருவைப் பயன்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது" என்றார்.
பால கிருஷ்ணா மேலும் விளக்கமளிக்கையில், “ஆரம்பத்தில் மாட்டுச் சாணத்தைப் பூசி நிலத்தைத் தயார் செய்துவிட்டு மரக்கன்றுகளை நடுவோம். பயிரிடும் செயல்முறை முழுவதும், மாட்டு சிறுநீரை மூன்று முறை பயன்படுத்துகிறோம். இந்த கரிம உரமானது சிறந்த நடைமுறை மட்டுமல்ல, பயிர், நிலம் மற்றும் விளைச்சலை ஆரோக்கியமான மற்றும் செழிப்பான நிலையில் பராமரிக்க மிகவும் பயனுள்ள வழியாகும்” என்றார்.
டும்ப்ரிகுடாவில் அமைந்துள்ள கில்லகுடாவில் நடைபெற்ற 15-வது ஆண்டு பாரம்பரிய விதை திருவிழாவில் ‘சிறந்த விவசாயி’ விருதையும் வினிதா வென்றார். பழங்குடியினரால் பின்பற்றப்படும் பழங்கால பாரம்பரியம், உள்நாட்டு விதைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.
இதையும் காண்க:
TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க
MFOI 2023- வேளாண் கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது எப்படி?