திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள நபர்கள், மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் மானியத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், போலி கால்நடை மருத்துவர்கள் குறித்த புகார் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதுத்தொடர்பான முழு விவரங்கள் பின்வருமாறு-
மீன் வளர்ப்புக்கு மானியம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் (PMMSY) பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுத்தல், புறக்கடை மற்றும் கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டங்களில் ஆர்வமுள்ள பயனடைய விரும்பும் விவசாயிகள் திண்டுக்கல், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
அணுகவேண்டிய முகவரி/ தொடர்பு எண்:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் “மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், பி4, 63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001“ என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0451 – 2900148, கைபேசி எண்கள் 97516 64565, 80720 49901 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
போலி கால்நடை மருத்துவர்களுக்கு எச்சரிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு செயற்கை பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக்கூறி சிகிச்கை அளிப்பதாக புகார் வரப்பெறுகிறது. இதுமுற்றிலும் தவறு. கால்நடை மருத்துவப் பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் (Veterinary Council) பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதனை மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது தவறான செயல் ஆகும்.
போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறை மற்றும் இறப்பிற்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய முடியும்.
எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவர்களை மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும். போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.
Read more: விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?
பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு மட்டுமே மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யப்பட வேண்டும். பிற துண்டு சீட்டுகளிலோ, மருத்துவர் எனக்கூறி பதிவு எண் போடாமல் வரும் மருந்து சீட்டுகளுக்கோ மருந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
போலி மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Read more:
விவசாயிகளை கௌரவிக்கும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வை 3 மாநிலங்களில் நடத்த ஏற்பாடு!