நலிந்து வரும் விவசாயத் தொழிலை விட்டு ஏராளமான விவசாயிகள் வேறு தொழில் தேடிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பு இதர விவசாயிகளை காப்பாற்றி வருகிறது. பருவ மழை பொய்த்தாலும் விளைச்சல் ஏமாற்றிலாம் ஆடு, மாடு வளர்ப்பு என்றும் நிலையான வருமானம் தரும் தொழிலாகும்.
கால்நடை வளர்ப்பில் பசு, எருமைகளுக்கு பராமரிப்பு, கொட்டகை செலவு, தீவனம் என அதிக செலவுகள் பிடிக்கும். ஆனால், குறைந்த முதலீட்டில் வெள்ளாடுகளை வளர்க்கலாம். மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன.
-
கன்னி ஆடுகள்
-
கொடி ஆடுகள்
-
சேலம் கருப்பு
கன்னி ஆடுகள்
இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை பால்கன்னி என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை செங்கன்னி என்றும் அழைக்கப்பர்.
கொடி ஆடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை , கரும்போரை என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை செம்போரை என்றும் அழைப்பர்.
சேலம் கருப்பு
இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
வெள்ளாட்டின் பயன்கள் (velladu growing benefits)
வெள்ளாடுகள் இறைச்சி (Meat) மற்றும் பால் (Milk) தேவைக்காக அதிகம் வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. தமிழகத்திலும் பெரும்பாலும் அதிகம் வெள்ளாடுகள் தான் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இது போன்ற கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ஒரு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
-
வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு
-
இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகை பராமரிப்பு செலவு குறைவு.
-
ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
-
பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
-
வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.
-
ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்பு குறைவு.
-
ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
-
பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதனால், ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன.
-
பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.
-
வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை.
-
ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
-
கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது.
-
கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.
மேலும் படிக்க...
நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்
ஆடுகளின் ஜீரணத்தன்மையை அதிகரிக்க உதவும் முருங்கைக்காய் - ஆய்வில் தகவல்