தர்மபுரி மாவட்டத்தில்லுள்ள நரிப்பள்ளி கிராமத்தில் நேற்றைய தினம் (23.10.2024) வேளாண்மை அறிவியல் நிலையம் (பாப்பாரப்பட்டி) மற்றும் அரூர் பகுதி கால்நடைத்துறை சார்பில் கால்நடை மற்றும் நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் அதற்கான நோய் மேலாண்மை குறித்து ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இந்த விழிப்புணர்வு பயிற்சியினை, வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மா.அ.வெண்ணிலா துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். டாக்டர் ராமகிருஷ்ணன் (உதவி இயக்குனர்,கால்நடை பராமரிப்பு துறை,அரூர் வட்டாரம்) சிறப்புரையாற்றி துறை சார்ந்த திட்டங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்:
நிகழ்வில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ம.சங்கீதா விவசாயிகளுக்கு பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்படும் அசோலா உற்பத்தி பற்றியும் எடுத்துரைத்தார்.
இதன் தொடர்ச்சியாக வேளாண் அறிவியல் நிலையத்தின் கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி முனைவர் இரா.தங்கதுரை மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றை கையாளும் விதம் தொடர்பாகவும், மரபுசார் மூலிகை மருத்துவம் கொண்டு சரி செய்யும் விதம் பற்றியும் விவசாயிகள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் இந்த முகாமில் நோய் தொற்றுக்குள்ளான மாடுகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் பொது மக்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்தார்.
டாக்டர் சந்தியா (கால்நடை உதவி மருத்துவர்,கால்நடை மருந்தகம்,நரிப்பள்ளி), கால்நடை மருந்தகத்தில் தினந்தோறும் நடைப்பெறும் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார். இந்த விழிப்புணர்வு பயிற்சியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்கள் குறித்து விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்று பயனடைந்தனர்.
விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தான்வாஸ் கிராண்ட் (TANUVAS GRAND) தொடர்பான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட மாடுகளிடமிருந்து உடற் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப உதவியாளர் கா.ரா.சீனிவாசன் செய்திருந்தார்.
25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த முகாமில், 15 மாடுகளிடமிருந்து நோய் மாதிரிகள் ABST (Antibiotic sensitivity test) சோதனைக்கான சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த முகாமின் மூலம், ஆரோக்கியமான கால்நடை விலங்குகளிலிருந்து நோய் வாய்ப்பட்ட கால்நடைகளை அடையாளம் காணுவது குறித்து விவசாயிகள் கற்றுத் தெரிந்துக் கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விவசாயம் மற்றும் கால்நடை சம்பந்தப்பட்ட தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பங்களை பெற பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்புக் கொள்ளுமாறும், விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் வாட்ஸ் அப் (whatsapp) குழுவின் மூலம் இணைந்து தங்களது சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வு காணவும் இந்த பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டார்கள்.
Read more:
பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!
E vaadagai: டிராக்டருக்கு ரூ.500 மட்டுமே- விவசாயிகளுக்கு ஆட்சியர் கொடுத்த அப்டேட்