விவசாயிகள் பலரும், தங்களது நிலத்தின் முக்கியத் தேவைக்காக, வெளியில் இருந்து ரசாயன உரங்கள் மட்டும் வாங்கினால் போதும் என தவறான மனப்பாங்குடன் செயல்படுகின்றனர்.
மேலும் கால்நடைகளை வளர்த்தால், ஏகப்பட்ட வேலை செய்ய வேண்டுமே, அவற்றுக்கு பராமரிப்பு செலவும் எகிறுமே, நினைத்த நேரத்திற்கு வெளியில் செல்ல முடியாதே, இப்படியெல்லாம் தவறான கண்ணோட்டத்தில் இருக்கின்றனர்.
இதனை அவர்களின் அறியாமையாகவே கருத வேண்டும். ஏனெனில் விவசாயத் தொழிலின் இணை ஆதரவுத் தொழில் (Supporting business) என்றால், அது கால்நடை வளர்ப்புதான்.
மாடு வளர்ப்பு (Cattle breeding)
பால் தராத மாடான மலட்டு மாடு கூட, விவசாயிக்கு லாபம் தரும் என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே. எனவே விவசாயிகள் ஆடு மற்றும் பசுங்கன்றுகளை வாங்கி வளர்க்க முன்வரவேண்டும். மாட்டில் இருந்து கிடைக்கும், பால், தயிர், நெய், கோமியம், சாணம் இந்த ஐந்தையும் கொண்டு பஞ்சகவ்யாவை தயாரித்து விற்பனை செய்யலாம்.
மண்ணுக்கு மாடு தேவை (The soil needs a cow)
அதேநேரத்தில், மாட்டின் வரவு-செலவுக்கணக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, நீடித்த வேளாண்மைக்கு நம் மண்ணைத் தயார்படுத்த உதவுவது கால்நடைகளே என்பதை உணர வேண்டும்.
தீவனங்கள் (Feeds)
வறட்சிக்காலத்தில், காடுகளில் புற்கள் இல்லை என்பது உண்மையே. ஆனால் நமக்கு முந்தைய பயிரில் விளைந்த பல துணைப்பொருட்களையே தீவனமாகப் பயன்படுத்தி செலவைக் கட்டுப்படுத்தலாம். இத்துடன் கலப்பு பயிராக நாம் வளர்த்த வரகு, கம்பு, மக்காச் சோளம், சாமை, கொள்ளு முதலியவை மட்டுமல்லாது கோதுமை, தவிடு, உளுந்து, பயறு, கடலைப்பொட்டு முதலியவற்றையும் தீவனத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
உலர் தீவனங்கள் (Dry fodder)
இதில் மக்காச்சோளத்திற்கு பதிலாக 50 சதவீதம் வரகு சேர்க்கலாம். நிலக்கடலைக் கொடி, கிழங்குத்திப்பி, பருத்தி விதை, புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்ப்பதும், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, காய்ந்த புல், சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூக்கள், கேழ்வரகு தாள் என இப்படி எத்தனையோ உலர் தீவனங்கள் உள்ளன.
பொதுவாக உளுந்து செடி, துவரைச் செடி, சவுண்டல், சீமை அகத்தி, வாகை முதலியவற்றை ஆடுகளுக்கும தீவனமாக்கலாம். கரும்புத்தோகையை தினசரி தீவனத்தில் 20 -30 சதவீதம் சேர்ப்பது நல்லது. அங்காங்கே கிடைக்கும் தழைகளை, அதாவது அகத்தி, வேம்பு, பூவரசு, குடைவேல், பலா, ஆல், அரசு, உதியன் மற்றும் இலந்தை இலைகளை கறவை மாட்டுக்கு தினம் 10 முதல்15 கிலோ தரலாம்.சிந்தித்துப் பார்த்து, செய்கையை மாற்றினால் கூடுதல் லாபம் பெறலாம்.
தகவல்
டாக்டர். பா.இளங்கோவன்
இணை இயக்குநர்
வேளாண்மைத்துறை
சேலம்
மேலும் படிக்க...
அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!