ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் வளர்த்த, எருமை மாடு இரண்டு தலை கொண்டக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக உடல்ரீதியான மாற்றங்களுடன் பிறக்கும் உயிர்கள் எல்லாமே மற்றவர்களுக்கு வியப்பான ஒன்றாகக் கருதப்படும்.
அதிலும் குறிப்பாக விலங்குகளில் சில அதிசயப்பிறவிகள் பிறக்கும்போது, அதனைப் பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படியொரு சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரை அடுத்த பூரா சிக்கிரஉடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் வீட்டில் எருமை மாட்டை வளர்த்து வந்தார். அந்த மாடு கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது.
அதிசயக் கன்றுக்குட்டி (Wonderful calf)
அந்த எருமை கன்றுக்கு அதிசயமாக இரண்டு தலைகள், 4 கண்கள் மற்றும் இரண்டு கழுத்துக்கள் இருக்கின்றன. இரண்டு மூக்கு, இரண்டு வாய் என கழுத்துக்கு மேலே இருப்பது எல்லாம் இரண்டாகவும், கழுத்திற்குக் கீழே இருப்பது எல்லாம் ஒன்றாகவும் உள்ளன.
மக்கள் படையெடுப்பு (Invasion of the people)
இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அங்கு படையெடுத்து வந்து, அதிசய கன்றுக்குட்டியைப் பார்த்து செல்கின்றனர்.
அந்த எருமை கன்றிற்கு புட்டியில் பால் கொடுத்தனர். எருமை இரண்டு வாய் மூலமும் பாலை குடித்தது. அதன் பின் கால்நடை மருத்துவர் வந்து அந்த கன்றை சோதித்து கன்றும், தாய் எருமையும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இரட்டைக் கரு (Twin)
கரு உருவாகும்போது இரட்டை உயிர்கள் உருவாகி பின்னர் அவை பிறக்கும்போது, ஒட்டிப்பிறந்த இரட்டையராக மாறுவது போன்று, இந்தக் கன்றுக்குட்டியும் இரட்டைக் கருவாக உருவாகி பின்னர் மாறியிருக்கலாம் என கால்நடை விவசாயிகள் சிலர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
கால்நடை தொழிலை விரிவாக்கம் செய்ய மானியம்! - விவசாயிகளுக்கு அழைப்பு!