பூமியில் புயல், நில நடுக்கம், கனமழை, சுனாமி (Tsunami) என மனித சக்திக்கு கட்டுப்படாத இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றில் புயல், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளை வல்லுநர்கள் முன்கூட்டியே உலகிற்கே தெரியப்படுத்தினாலும், பல கணிப்புகள் தவறிவிடுவதும் உண்டு. நில நடுக்கம் எந்த நேரத்தில் நிகழும்? என அவர்களால் முன்னெச்சரிக்கை எதுவும் தர முடியவில்லை. சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்பட போகும் நிகழ்வுகளை வைத்து பகுத்தறிவு பெற்ற மனிதனால் உணர முடியாத, நுட்பமான உணர்வுகளைக்கூட கால்நடைகளும், பறவைகளும் (Birds) முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றன. காற்றின் வேகம், குறைந்த ரிக்டர் அளவில் ஏற்படப்போகும் நில நடுக்கம், புவி ஈர்ப்பு விசையில் (Gravity) ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொள்ளும் திறமையை விலங்குகளும் பறவைகளும் பெற்றிருக்கின்றன.
முன்கூட்டியே அறியும் திறன்:
கோழியின் செயல்பாடு, முட்டையிடுவது மட்டுமே கோழியின் பணி என்று நினைத்தால் தவறு. அவை புயல், நில நடுக்கம் (Earthquake) போன்ற இயற்கை மாற்றம் நிகழும் முன் முட்டையிடுவதையே நிறுத்திக் கொள்ளும். இச்சமயங்களில் மிக உயரமான இடங்களுக்கு சென்று அமர்ந்து கொண்டு கூவிக் கொண்டே இருக்கும். புயல் (Storm) உண்டாகப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் பறவைகள் நிலப்பரப்பின் மீது தாழ்வாக பறக்கும். அப்போது கண்களுக்கு புலப்படும் பூச்சிகளை மிக அவசரமாக வேட்டையாடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மழை வரும் முன்பே எறும்புகள் (Ants) தங்கள் உணவுப் பொருளை சுமந்து கொண்டு சாரை சாரையாக மரத்தில் ஏறத் தொடங்கும். நில நடுக்கம் ஏற்படப் போகிறது என்று தெரிந்தால், தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை விட்டு வெளியேறி மரப்பொந்துகளை தேடி ஒளிந்து கொள்ளும் உயிரினம் பூனைகள் (Cats) தான். இயற்கை இடர்பாட்டை முன்பே உணரும் பூனைகள் மரப்பொந்துகளில் பதுங்கி தங்களை பாதுகாத்து கொள்ளும். எஜமான்களிடம் அதிக விசுவாசத்துடன் நடந்து கொள்ளும் நாய்கள் இயற்கை சீற்றத்தை உணரும் போது, தங்கள் எஜமானனை கடிக்க ஆரம்பிக்கும். சில நாய்கள் எஜமானின் பின்னால் ஓடிக் கொண்டும், தொடர்ந்து குரைத்து கொண்டும் இருக்கும். நிலநடுக்கம் ஏற்படும் முன்பு நாய்கள் மனிதர்களிடம் பகைமை உணர்வைக் காட்டும்.
ஆடு, மாடுகள் காட்டும் அறிகுறிகள்
ஆடுகள் நில நடுக்கம் ஏற்படப் போவதை உணரும் விதம் சற்றே வித்தியாசமானது. கொட்டகைக்குள் அடைபட்டிருந்தால் வெள்ளாடுகள் (Goats) அவ்விடத்தை விட்டு அகன்று விடும். செம்மறி ஆடுகளோ மழை வரப்போகிறது என்று தெரிந்தால் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நின்று கொள்ளும். நில நடுக்கம் ஏற்பட போகிறது என்பதை காட்டும் அறிகுறியாக குதிரைகள் மனிதர்களை தாக்க முயற்சி செய்யும். மாடுகள் ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டே இருக்கும். அவை தங்கியிருக்கும் கொட்டகையில் இருந்து வெளியே வர முயற்சிக்கும். மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் செயலை நில நடுக்கம் ஏற்படும் முன்பாக பசுமாடுகள் நிகழ்த்துகின்றன. மூன்று முதல் ஏழு நாட்களுக்கு முன்னால் பசுக்கள் இரவில் தொடர்ந்து கத்தும். தீவனம் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும். சுனாமி, கடல் சீற்றம் (Furious Sea) ஏற்படும் முன்பாக, கடல் வாழ் மீன்கள் நீர்ப்பரப்பில் இருந்து வெளியே குதித்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும். பகுத்தறிவு இல்லாததாக நாம் நினைக்கும் உயிரினங்கள் மேற்கண்ட செயல்கள் மூலம் இயற்கை இடர்பாடுகளை (Natural disasters) நிகழப்போகும் முன்பே உணர்ந்து கொள்கின்றன.
மனிதர்கள் அறியும் முன்னரே, ஐந்தறிவு உயிரினங்கள் இயற்கை சீற்றங்களை அறிந்து கொள்வது வியப்பை அளித்தாலும், பறவைகள், ஆடு, மாடுகளின் செயல்பாடட்டைக் கண்டு கொண்டு நாமும் விழிப்புடன் இருப்போம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் பெல்லாரி வெங்காயம் விற்பனை! விலை என்னவாக இருக்கும்?
பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் நிதியுதவி திட்டத்திற்கு, 25 லட்சம் விண்ணப்பங்கள்!