கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மீண்டும் துவங்கி உள்ளது.
தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், இரு கட்டங்களாக கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் மட்டும் 1.4 கோடிக்கு மேல் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்
பொதுவாக கால்நடைகளை தாக்கும் மிக முக்கியமான நோய்களில் கோமாரி நோயும் ஒன்றாகும். வைரஸ் கிருமிகளால் உண்டாகும் இந்நோயானது கால் மற்றும் வாய் காணை போன்றவற்றை தாக்கும். இதனால் வாயிலும், நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படுவதுடன், எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டே இருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். இதனால் பால் குறைதல், சினை பிடிப்பதில் சிரமம், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். இதனால் கறவையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு அரசு கால்நடைகளுக்கு கட்டாயம் கோமாரி தடுப்பூசி போடும்படி பரிந்துரைத்துள்ளது.
கொரோனாவால் தடைபட்ட மூகாம்
நடப்பு ஆண்டுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோன நோய் பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களினால் மார்ச் மாதத்திற்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் முழுமையாக நடைபெறவில்லை. எனவே இதுவரை கோமாரி நோய் தடுப்பூசி போடப்படாத கால்நடைகளுக்கு, வரும் ஜூன் மாதம் முதல் போடப்படும் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி முகாம் மீண்டும் துவக்கம்
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் தமிழகத்தில் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 265 ஊராட்சிகளை உள்ளடக்கிய, 350 வருவாய் கிராமங்களில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த, 20 நாட்களில், 48 ஆயிரத்து 984 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின் ஊரடங்கு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கால்நடைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணியை கால்நடைத்துறையினர் துவக்கியுள்ளனர்.
இதோபோல் ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ககிராமங்களிலும் உள்ள சுமார் 1.68 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது.
இந்த கோமாரி தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மருத்துவக் குழுவினர் அந்தந்த கிராமத்துக்கே சென்று முகாமிட்டு கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்படுத்தப்படுவர்கள் என்று ஒசூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இளவரசன் கூறியுள்ளார்.
கால்நடைகளை பாதுகாக்கவும், விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்கவும் இந்த சிறப்பு முகாமை பண்ணையாளர்கள், கால்நடை விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
அடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு
கறவை மாடுகளுக்கு நோய் பரவலை தடுக்க என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?