இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து 25 லட்சம் ரூபாயினை மானியமாக பெற்றுள்ளது, eFeed. டெல்லியில் உள்ள ICAR வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வின் போது, இந்த மானியத்தொகை eFeed நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ICAR இன் முன்னணி தலைவர்கள், இணை இயக்குனர்கள், வேளாண் விஞ்ஞானிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
2020 டிசம்பரில் குமார் ரஞ்சனால் நிறுவப்பட்டது தான் eFeed. விலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, விலங்குகளின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கால்நடைத் தொழிலின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் eFeed கவனம் செலுத்தி வரும் நிலையில் அதன் பணியினை ICAR பாராட்டி இந்த மானியத்தினை வழங்கியுள்ளது.
eFeed நிறுவனத்தின் செயல்பாடுகள்:
eFeed- கால்நடை விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் பயன் உள்ளதாக செயல்பட்டு வருகிறது. கால்நடைக்களுக்கான சமச்சீர் உணவு (TMR), தீவன தன்மை மற்றும் கால்நடைத் துறையில் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு மீத்தேன் வெளியேற்றத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடி வருகிறது.
கால்நடைகளுக்கான கரிம தீவனச் செயலாக்கம் மற்றும் வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி தீவனத்தைத் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்க பயிற்சித் திட்டங்களை நடத்தி வருகிறது.
மானியத் தொகையில் என்ன திட்டம்?
ICAR வழங்கிய மானியத் நிதியுதவி eFeed நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும். eFeed- பால் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கால்நடை மற்றும் பால்வளத் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. நிலையான கால்நடை வளர்ப்பு நடைமுறை மற்றும் நிலையான வருமானத்தை பெறும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் பயிற்சியை இன்னும் அதிகரிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
eFeed நிறுவனத்தில் முதலீடு:
eFeed நிறுவனத்தின் செயல்பாடுகளால் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். Omnivore, Huddle, Better Capital, Faad மற்றும் Venture Catalyst போன்ற முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து $1.5 மில்லியனுக்கும் அதிகமான நிதியினை eFeed மூலதனமாக திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
eFeed இன் நிறுவனர் மற்றும் CEO, குமார் ரஞ்சன், ICAR வழங்கிய நிதியுதவி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், "ICAR வழங்கிய இந்த மானியம் eFeed இல் நாங்கள் செய்து வரும் பணிக்கு ஒரு நற்சான்றாகும்."
"விலங்குகள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் இது. எங்களின் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் அதிக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தி தன்மை அதிகரிப்பதற்கும் இந்த நிதியுதவி உதவும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Read also:
கனமழையால் பாதித்த பயிர்களை மீட்டெடுக்க சூப்பர் ஐடியா!
மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமா? அரசின் 5 மானியத்திட்டங்கள் உங்களுக்காக