1. விவசாய தகவல்கள்

கனமழையால் பாதித்த பயிர்களை மீட்டெடுக்க சூப்பர் ஐடியா!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
crops affected by heavy rains

அதீத கனமழை மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டு தமிழக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனிடையே, தென் மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வருகின்ற 12 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து முனைவர் கே.சி.சிவபாலன் (க்ரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆய்வு  மையம்), முனைவர் எஸ். நித்திலா (இணை  பேராசிரியர் பயிர் வினையியல் துறை , மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி) ஆகியோர் சில ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.

விவசாயிகள் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் மேலாண்மை முறைகள் பின்வருமாறு-

  • உடனடியாக தேங்கி இருக்க கூடிய தண்ணீரை வடிகட்ட வேண்டும் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  • மழை வெள்ளத்தில்  மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடித்து செல்லப்பட்டிருக்கும். ஊட்டச்சத்து பற்றாக்குறை தவிர்க்க இளம் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டிஏபி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாஷ் உரத்தை  இலை வழி  தெளிப்பாக கொடுக்கலாம்.
  • நெற்பயிரில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி கிராம் பிரேசினோலிடே தெளித்து ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கலாம்
  • சைக்கோ செல் 500 பிபிஎம் தெளிக்கலாம்.
  • தண்ணீர் தேங்கி இருக்க கூடிய சூழ்நிலையில் வேர்களை அழுகல் நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும், பயிர்களை மீட்டெடுக்கவும் எந்த வகை பயிருக்கும், ஓர் ஏக்கருக்கு 1 லிட்டர் டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் ஒரு லிட்டர் பாசிலோ மைசீஸ் என்ற உயிரியல் திரவங்களை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலம் முழுவதும் படுமாறு ஈர மண்ணில் ஊற்றிவிடலாம்.

12 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு தரை வழியாக ஊற்றி விடுவதால், பயிர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும். களி மண் நிலங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருந்தால்கூட, இந்த திரவங்களை மண்ணில் ஊற்றி விடுவதால் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

சூடோமோனாஸ் அல்லது பேசிலஸ் சப்ஸ்டில்ஸ் போன்ற உயிர் திரவங்களை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பான் மூலம் பயிர்கள் மீது தெளித்து விடலாம். இரண்டு திரவங்களும் கிடைக்கும் பட்சத்தில், 10 லிட்டர் தண்ணீரில் தலா 50 மில்லி கலந்து பயிர்கள் மீது வாரம் ஒருமுறை என இரண்டு முறை தெளிக்கலாம்.

கைக்கொடுக்கும் மீன் அமிலம்:

இனிவரும் காலங்களில் எளிதாக கிடைக்கும் குறைந்த விலை கரைசல்களான இஎம் கரைசல், வேஸ்ட் டி காம்போசர், மீன் அமிலம் போன்ற திரவங்களை குறுகிய காலத்தில் பெருக்கம் மற்றும் உற்பத்தி செய்து, பயிர்களுக்கு தரை வழியாகவும், தெளிப்பாகவும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

அப்போது, மண்ணில் படிந்துள்ள கழிவுப் பொருட்களின் பாதிப்பை மாற்றியும், நிலம் வழியாக சத்துகளை அதிகரித்தும் மற்றும் இலை வழியாக உணவு தயாரிக்கும் செயல்பாட்டை அதிகரித்தும் பயிர்களை மீட்டு எடுக்கலாம். இது போன்ற உயிரியல் திரவங்கள் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்கும். மேலும், இவற்றை உபயோகப்படுத்துவது குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களிடம் விவரம் பெற்று பயன்படுத்தலாம்.

வாழை மரங்களை சுற்றி சுண்ணாம்பு தூள்:

முற்றிய பயிராக இருந்தால்  உடனடியாக  இயந்திர அறுவடை மேற்கொள்ளலாம். அறுவடை செய்த நெல் மணிகள் ஈரமாக இருந்தால்  உப்புடன் சேர்த்து காய வைக்கலாம்.

Read also: தானிய உற்பத்திக்கு சீனாவை விட அதிக நீரை பயன்படுத்தும் இந்திய விவசாயிகள்- தீர்வு என்ன?

தோட்டக்கால் பயிர்களுக்கு மானாவாரி பயிர்களுக்கு நுனி பயிரை கிள்ளி விட்டு பக்க கிளைகளை அதிகரிக்கலாம். தோட்டக்கால் பயிர்களில் குறிப்பாக வாழை மரங்களை சுற்றி சுண்ணாம்பு  தூளை தூவி விட்டால் ஈரம் காய்ந்திட ஏதுவாக இருக்கும்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்கள் இருப்பின், நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய இமெயில் முகவரி : shiv_balan@yahoo.com)

Read also:

அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்குமா? கடைசி நேரத்தில் முதல்வர் தந்த சர்ப்ரைஸ்

சைலண்ட் ஜெனரேட்டர்- தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யும் TAFE

English Summary: good tips for farmers to recover crops affected by heavy rains Published on: 09 January 2024, 05:43 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.