கால்நடை வளர்க்கும் ஒவ்வொருவரும் அவைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசரகாலமுதலுதவி சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
முதலுதவி சிகிச்சைகள் (Importance of First aid to livestock)
முதலுதவி (First Aid) என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்ட கவனிப்பாகும். சில கட்டுப்படுத்தக் கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமல் கூடப் போகலாம். முதலுதவி சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகின்ற திறன்களை உள்ளடக்கியது.
கால்நடை முதலுதவிப் பெட்டி (Livestock First-aid Kit)
கால்நடைகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கு முதன்மையான உதவிகள் செய்வதற்காக சில இன்றியமையாத மருத்துவப் பொருட்களைக் கொண்டுள்ள பெட்டியே முதலுதவி பெட்டியாகும். ஓவ்வொரு கால்நடை பராமரிப்பாளர் வீட்டிலும் இந்த முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும்.
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியப் பொருட்கள்
-
மென்மையான துணி அல்லது பஞ்சு (காயத்தினைச் சுத்தம் செய்ய)
-
கட்டுத்துணி அல்லது துணிச் சுருள் (காயத்தின் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த)
-
டெட்டால் அல்லது சாவ்லான் போன்ற கிருமி நாசினிகள் (காயத்தினை சுத்தம் செய்ய)
-
ஒட்டுப்பட்டை (பிளாஸ்திரி)
-
டிஞ்சர் அயோடின், பீட்டாடின் கலவை, சல்பா மருந்து, டிஞ்சர் பென்சாயின், பொட்டாசியம் பெர்மாங்கனேட் துகள்கள்
-
கையுறை, டார்ச்லைட், கத்திரி மற்றும் சங்கிலி, தீப்புண் மருந்து
-
சில அடிப்படை வலி நீக்கி, ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் குறைப்பு மாத்திரைகள்.
வெட்டுக்காயங்கள் - Cuts
காயத்தை முதலில் வெதுவெதுப்பான சுத்தமான நீரில் கிருமிநாசினியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து நன்றாக கழுவ வேண்டும். பிறகு சுத்தமான துணியால் துடைத்து விட்டு, காயத்தின் மேல் டிஞ்சர் அயோடின் அல்லது சல்பா மருந்து பொடியைப் போட்டு, சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியால் காயத்தைக் கட்ட வேண்டும். பின் கால்நடை மருத்துவரை உடனடியாக அணுகவும்.
சிறு காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் இரத்தக் கசிவு
முதலில் காயத்தினை சுத்தமாக கழுவ வேண்டும். பின்பு இரத்தக் கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியால் காயத்தினைக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் காயத்தின் மீது தொற்று ஏற்படுவது தவிர்க்ப்படுகிறது. சில சமயம் புண்களில் ஈ மூலம் புழுக்கள் உற்பத்தியாகி காயத்தைப் பெரிதாக்கக் கூடும். இதற்கு கற்பூரத்தைப் பொடி செய்து புண்களின் மீது வைக்கலாம் அல்லது வேப்பெண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
சுளுக்கு - Sprain
அதிக சுமை ஏற்றிச் செல்வதாலும், நடை தவறி மாடுகள் கீழே விழுவதாலும் ஏற்படும் தசைகளின் அதிர்ச்சியே சுளுக்காகிறது. இதற்கு ஒத்தடம் கொடுக்கலாம். மேலும்,சுளுக்கு உள்ள இடத்தில் டர்பென்டைன் லினமென்ட் போடலாம்.
வயிற்று உப்பசம் - Abdominal bloating
பயறு வகை தீவனத்தை உட்கொள்ளல், புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, தீவனத்தை மாற்றுதல், உண்டபின் அதிகம் தண்ணீர் குடிப்பது மற்றும் உள் வயிறு சுழன்று கொள்வதால் வயிற்று உப்பசம் ஏற்படுகிறது.
இதற்கு முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250மி.லி முதல் 300 மி.லி மற்றும் ஆடுகளுக்கு 30 முதல் 40 மி.லி. வாய் வழியே ஊற்ற வேண்டும். கவனமாக, புறை ஏற்படாமல் ஊற்ற வேண்டும். வயிறு உப்பசம் அதிகமாகி கால்நடைகள் மூச்சு விட சிரமப்பட்டால் உடனே கால்நடை மருத்துவரைக் கொண்டு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும்.
அமில நச்சு - Acid poisoning
இளம் சோளப் பயிர், மரவள்ளிக்கிழங்கு மற்றும் அதன் இலை ஆகியவற்றை அதிகமாக உண்டால் கால்நடைகள் சில மணி நேரத்திற்குள்ளேயே இறக்க நேரிடும். எனவே உடனே கால்நடை மருத்துவரைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத் தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி, காய வைத்து கொடுக்க வேண்டும். அரிசி, சாதம், பொங்கல், சேமியா பாயாசம், மாவு, பழக்கழிவுகள் மற்றும் தானியங்களை அதிகமாக உட்கொள்வதால் வயிறு உப்பிசம் ஏற்படலாம்.
இதற்கு முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு 10 முதல் 20 கிராம் சமையல் சோடாவை 100 மி.லி. தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்க வேண்டும். உடனே சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.
யூரியா நச்சு - Urea toxic
உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ அல்லது தவறுதலாக தண்ணீர் தொட்டியில் யூரியாவைக் கலப்பதால் யூரியா நச்சு ஏற்பட வாய்ப்புள்ளது. முதலுதவியாக வாய்வழியாக ஆடுகளுக்கு 400 முதல் 500 மி.லி. வினிகர் கொடுக்கலாம். கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு 3 முதல் 4 லிட்டர் வரை பிரித்து கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்.
நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்
விஷம் மற்றும் நச்சுக்கள் - Poisons and toxins
பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல் மற்றும் நச்சுத் தன்மையுடையச் செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத் தன்மை ஏற்படலாம்.
இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது விஷம் வயிற்றில் தங்காமல் இருக்க உப்புக் கரைசல் அல்லது சோப்புக் கரைசலை வாய் வழியாகக் கொடுக்கலாம். மேலும் அடுப்புக் கரியைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து வாய் வழியாகக் கொடுக்கலாம்.
தீப்புண் - Burn
ஆட்டுக் கொட்டகைகளில் தீப்பிடித்தால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். ஆட்டின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்குப்பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றி, காற்றோட்டமான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தீப்பிடிக்காதப் பொருட்களைக் கொண்டு கொட்டகைகளில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும்.
இரசாயன திரவங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் (Chemical Burns)
இரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால், தோல் மற்றும் தசை வெந்து விடும். அமில வகை திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புத் தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எந்த வகை இரசாயனம் எனத் தெரியாவிட்டால் நிறைய சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
பால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் - கால்நடைத்துறையினர் யோசனை
கருப்பை வெளித்தள்ளுதல் - Uterine expulsion
கருப்பை வெளியே தள்ளப்பட்டால் அதனை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரைக் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகு மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்து விடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியைப் போர்த்தி வைக்க வேண்டும். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.
அந்நியப் பொருட்களால் உணவுக் குழாய் அடைப்பு
கால்நடைகளின் தொண்டையில் ஏதாவது அடைத்து விட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்து விடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கைக் கீழே அழுத்திக் கொண்டு வாயிற்குள் இடுக்கிக் கொண்டு அடைப்பை எடுத்து விடலாம். உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்பிசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் கால்நடைகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்து விடும்.
கொம்பு முறிதல் - Horn fracture
கால்நடைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போதோ கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக் கொம்பு முறிந்தால் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரைக் கொண்டு கழுவிய பின் களிம்பு தடவலாம். இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிஞ்சர் பென்சாயின் ஊற்றவும், கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரம் மற்றும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை, சுண்ணாம்பு, மண் மற்றும் ஒட்டடை போன்றவற்றை கொம்பு முறிந்த இடத்தில் இடக் கூடாது.
எலும்பு முறிவு - fracture
விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்படாத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப் போட வேண்டும். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒரு சேர இருப்பின் அந்த காயங்களுக்குக் கட்டுப் போடக் கூடாது. உடனே கால்நடை மருத்துவரை அணுகவும்.
வாலில் சொறி - Rash on the tail
வால் தடித்து காணப்படும். மேலும் முடி உதிர்ந்து சொர சொரப்பாக இருக்கும்.இதற்கு வேப்பெண்ணையுடன் கந்தகக் களிம்பு அல்லது துத்தநாக ஆக்சைடு கலந்து போட வேண்டும்.
''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!
பாம்புக் கடி - Snake bite
பாம்புக் கடி என்றால் இரத்தப் போக்கைக் கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டு விடலாம். காயத்தைச் சுத்தப்படுத்தி கட்டுப் போட வேண்டும். உடனே கால்நடை மருத்துவரை அணுகவும்.
நாய்க் கடி - Dog bite
நாய் கடித்த இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே கால்நடை மருத்துவரை அணுகவும். வெறிநாய்க்கடிக்கானத் தடுப்பூசி அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளில் போடப்படுகிறது.
மின் அதிர்ச்சி - Electric shock
கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவு இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆட்டுக் கொட்டகைகளில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். அதன் பின்பே அருகில் செல்ல வேண்டும்.
முறையான மருத்துவம் செய்யும் முன் விபத்து அல்லது நோயின் தாக்கத்தைக் குறைக்கச் செய்வதே முதலுதவியாகும். முதலுதவி மட்டும் செய்து கால்நடை மருத்துவரைக் கொண்டு முழு சிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே முதலுதவிக்குப் பின்னும் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.
தொகுப்பு,
மருத்துவர்.மு.பாரதிதாசன்,
உதவி பேராசிரியர், கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்தவக் கல்லூரி மற்றும் ஆராட்ச்சி நிலையம்
திருநெல்வேலி
தொடர்புக்கு: dr.dass07@yahoo.in
மேலும் படிக்க
நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!
நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்
பால் பண்ணைத் தொடங்க விருப்பமா? 1.75 லட்சம் ரூபாய் மானியம் அளிக்கிறது மத்திய அரசு