கோவையில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆடு, மாடு அறுவைமனையில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்றது. இதனால், மாநகராட்சி வருவாய் பிரிவினர், இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை - சத்தி ரோட்டில் உள்ள ஆடு, மாடு அறுவைமனையில் கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான பொது ஏலம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.ரூ.75 ஆயிரத்தை வைப்புத்தொகையாகச் செலுத்தியிருந்தனர்.
2022-23 முதல், 2024-25 வரையிலான மூன்றாண்டு காலத்துக்கு ஏலம் விடப்பட்டது. பொது ஏலம் கோரியவர்கள், போட்டி போட்டுக்கொண்டு தொகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இறுதியாக ஒருவர், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரினார். அதைக்கேட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
அத்தொகையை செலுத்த முடியுமா என்கிற கேள்வி எழுந்தபோது, சிறிது நேரம் அவகாசம் அளித்தால், கூடுதல் வைப்புத்தொகை செலுத்துவதாக, ஏலம் கோரியவர் கூறினார். பின்னர் தான் உறுதியளித்தபடியே, 30 நிமிட அவகாசத்துக்குள், அத்தொகையை செலுத்தினார்.
வியப்பில் மக்கள்
ஆடு, மாடு வெட்டுவதற்கான கட்டணங்களை, மாநகராட்சி நிர்வாகமே நிர்ணயிக்கும். இந்த இடத்தில் விலங்கினங்களை வெட்டுவதற்கு தற்போதைய கட்டணம் ரூ.10 ஆக உள்ளது. இதன்படி வசூலித்தால், ஏலதாரர் செலுத்தும் தொகையை திரும்ப எடுக்க வாய்ப்பில்லை என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனால் ஆடு, மாடு அறுவைமனையில் என்ன நடக்கிறது என்பதை, தினமும் கண்காணிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...