நாட்டுக் கோழிகள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) கொண்டவையாக இருந்தாலும் அவைகளும் சில நோய்களால் தாக்கப்பட்டு இறக்கலாம். நோய்களை அறிந்து அவை தாக்காமல் பராமரித்தால் அதிக லாபம் (Profit) பெறலாம். நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடும் மிகக்குறைவு என்பதால், சாமானிய மக்களும் இத்தொழிலில் ஈடுபடலாம். மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு அரசும் மானியம் (Subsidy) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இலவச தடுப்பூசி
கோடை (Summer), குளிர் காலம் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் தாக்கக்கூடியது வெள்ளைக் கழிச்சல் நோய் (White diarrhea disease). இதனை கொக்கு நோய், ராணிக்கெட் நோய் என்றும் சொல்வர். இது நச்சுயிரியால் ஏற்படுகிறது. நோய் தாக்கிய கோழிகளின் குடலும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது. தீவனம் (Fodder), தண்ணீர் எடுத்துக் கொள்ளாது. வெள்ளையாகவும், பச்சையாகவும் கழியும். வந்தபின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியாது என்பதால் வருவதற்கு முன்பாக தடுப்பூசி (Vaccine) போடுவது அவசியம். குஞ்சுகள் பொறித்த 7 முதல் 10 நாட்களுக்குள் தடுப்பூசியை கண் அல்லது நாசித் துவாரத்தில் சொட்டு மருந்தாக ஒன்று அல்லது இரண்டு சொட்டு இட வேண்டும். கோழிகளின் 2 மாத வயதில் இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி போட வேண்டும். பின் ஒவ்வொரு 3 மாதத்திற்கொரு முறையும் போட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி (Free Vaccine) போடப்படுகிறது.
கோழி அம்மை நோய்
நாட்டுக் கோழிகளைத் தாக்கக் கூடிய மற்றுமொரு நோய் தான் கோழி அம்மை நோய், இந்நோய் நச்சுயிரியால் ஏற்படும். கோழிக் கொண்டை, தலை, கண் புருவம், செவில் மடல், நாசித்துவாரத்தின் மேலும் கொப்புளங்கள் உண்டாகி புண் ஏற்படும். கண் பார்வை மறைந்து, தீனி எடுக்க முடியாமல் தவிக்கும். நோயுற்ற கோழிகள் முட்டை இடாது. மஞ்சள் (Turmeric) மற்றும் வேப்ப இலையை (Neem) அரைத்து கொப்புளங்களில் பூச வேண்டும். எண்ணெயில் போரிக் பவுடர் கலந்தும் பூசலாம். குஞ்சாக இருக்கும் போது 3 வார வயதில் தடுப்பூசி போட வேண்டும். உருண்டை, நாடா மற்றும் தட்டைப்புழுக்கள் தாக்கும் போது அவற்றின் வளர்ச்சி குன்றி உடல் நலியும். கடுமையாகக் கழியும். எச்சத்தில் புழுக்கள் நெளியும். வெளி ஒட்டுண்ணிகளை அழிக்க ஒருலிட்டர் தண்ணீரில் 5 மில்லி ப்யூடாக்ஸ் மருந்தை கலந்து தலையை தவிர கோழியின் உடலை நனைக்க வேண்டும். நோய்கள் வந்தவுடன் சிகிச்சை அளிப்பதை விட வரும் முன் காப்பதே லாபகரமான தொழிலுக்கு நல்லது.
உமாராணி, பேராசிரியர்
கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தேனி.
kamleshharini@yahoo.com
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீலகிரியில் கருகிய தேயிலைச் செடிகள்! கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்!