
Credit : The Financial Express
விவசாயிகளின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாய சட்டங்களை (Agri bills) ரத்து செய்யும் வரை ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நாளை கறுப்பு நாளாக (Black day) அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், மக்கள் தங்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் கறுப்புக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் தொடங்கியது எப்படி?
மத்திய பாஜக (BJP) அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல் சில வாரங்கள் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் ஆட்சியிலிருந்த அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தது. அதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியை (Delhi) முற்றுகையிட்ட விவசாயிகள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகரில் கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, அங்கு கடும் குளிர் நிலவியது. மற்ற மாநிலங்களைவிட டெல்லியில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். இதனால் குளிரிலிருந்து தப்பிக்கவும் நீண்ட நாட்கள் போராட்டத்தைத் தொடரவும் வசதியாகக் கூடாரங்களை விவசாயிகள் எழுப்பினர். இன்னும் சில வாரங்களில் கோடைக் காலம் (Summer) தொடங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடும் வெயிலிலிருந்த தப்பிக்கும் விதமாக தற்போது ஏசிக்களை (AC) விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
டிராக்டர் பேரணி குழப்பம்
குடியரசு தின டிராக்டர் பேரணி (Tractor rally) குழப்பம்
விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஜனவரி 26ஆம் தேதி தலைநகரில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்போது மற்ற அமைப்பினரும் அதில் புகுந்து கொண்டதால் திடீர் குழப்பம் ஏற்பட்டது. சில விவசாயிகள் டெல்லி செங்கோட்டையில் விவசாயச் சங்கங்களுக்கு ஆதரவான கொடியையும் ஏற்றினர். இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். போலீசாரும் காயமடைந்தனர். இதன் காரணமாக பட்ஜெட் (Budget) தினத்தன்று நடைபெறவிருந்த டிராக்டர் பேரணியை ரத்து செய்வதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன.
ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்
விவசாயிகள் போராட்டம் (Farmers protest) 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இது குறித்து விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், 'நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்' என்றார். மத்திய அரசுக்கும் விவசாயச் சங்கங்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் போராட்டம் தொடர்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை
அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!
Share your comments