புதுக்கோட்டை மாவட்டத்தின் மல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் நாட்டு மாடுகளை வளர்த்து வெற்றிகரமாக பால் வியாபாரம் செய்து வருகிறார். நாட்டு மாடு வளர்ப்பது குறித்தும் அதற்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான மருந்துகள் பற்றியும் மகேஸ்வரி விளக்குகிறார்.
நாட்டு மாடுகள் வளர்ப்பு குறித்து மகேஸ்வரி கூறுகையில், “ஜெர்சி மாடுகளை விட நாட்டு மாடுகளை வளர்ப்பது மிகவும் எளிது. நாட்டு மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அதனால் அதற்கு எந்தவிதமான நோய் தாக்குதல்களும் அதிகமாக ஏற்படாது.
பொதுவாக நாட்டு மாடுகளுக்கு தீவனம் வாங்க வேண்டிய தேவை அதிகம் இருக்காது. எங்கள் ஊர்களில் கிடைக்கும் தீவனங்களே போதுமானதாக உள்ளது. மேலும் இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இவற்றின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாடு வளர்ப்பிற்கு நாங்கள் எந்தவிதமான செயற்கை பொருட்களையும் கடைகளில் இருந்து வாங்கி வந்து கொடுக்க மாட்டோம். நாங்களே இயற்கையான முறையில் மாட்டிற்கு தேவையான தீவனப் பொருட்களை விதைத்து வளர்த்து வருகிறோம். நாட்டு மாடை பொறுத்தவரை 2 முதல் 3 லிட்டர் பால் தரும். குறைவான பால் கொடுத்தாலும், ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு கொடுத்து வருகிறோம். இந்த வகையான மாடுகளை பொறுத்தவரை அதற்கு நோய் ஏதும் வந்தால் நாங்கள் எளிமையாக கண்டறிந்து அதற்கான மருந்தை இயற்கை முறையில் மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே தயார் செய்து கொடுத்து சரி செய்து விடுவோம்.
மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்த மஞ்சள், மிளகு, வெற்றிலை ஆகியவற்றை 3 வேளையும் மாடுகளுக்கு கொடுத்து வந்தால் குணமாகிவிடும். வேப்பிலை, மஞ்சள், வெந்தயம், தேங்காய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் பெரியம்மை நோய் தாக்காமல் இருக்கும். வெளி தோலில் ஏற்படும் புண்களுக்கு மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து போட்டு கட்டுப்படுத்தலாம். மேலும் மிகவும் முக்கியமான மாடுகளை தாக்கும் கோமாரி நோய் கட்டுப்படுத்த சீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம், தேங்காய் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து மாட்டின் நாக்கில் தடவி வர கோமாரி நோயையும் தடுத்துவிடலாம்” என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: