கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட கோவை மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கோவையில் 3,900 கால்நடைகளுக்கும், தர்மபுரியில் மூலம் 3,900 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கால்நடைகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்பினை ஈடுசெய்யும் வகையில் தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3,900 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,
-
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேலுள்ள கால்நடை வளா்ப்போா் 50 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
-
8 ஆண்டு வயதுடைய கறவை பசுக்கள், எருமைகள் மற்றும் முதல் 3ஆண்டுகள் வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும்.
-
அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
-
ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆா்வமுடைய கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாய பெருமக்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி ஆட்சியர் அழைப்பு
இதோபோல், தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, 35 ஆயிரம் வரை மதிப்புள்ள கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யலாம். அதற்கு மேலுள்ள கால்நடைகளுக்கு, கூடுதல் தொகைக்கான காப்பீடு கட்டணத்தை, கால்நடை உரிமையாளர்களே செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், 70 சதவீத மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், 50 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்லாம். அதிகபட்ச, இரண்டரை வயது முதல், 8 வயது வரையிலான, 5 பசு, எருமைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், ஒன்று முதல், 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும், மானிய விலையில் காப்பீடு செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று மீண்டும் டிராக்டர் பேரணி!!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!