Animal Husbandry

Sunday, 05 November 2023 05:40 PM , by: Muthukrishnan Murugan

Free Vaccination

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதுத்தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டு (4-வது சுற்று) கோமாரி நோய் தடுப்பூசி நவம்பர் 6 முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. பொதுவாக, கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.

இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை,இலவசமாக அனைத்து கால் நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100% தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு 2023 நவம்பர் 6 முதல் 21 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை விவசாய பெருமக்கள் / கால்நடை வளர்ப்போர் அணுகலாம் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்.

இதைப்போல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தூத்துக்குடி மாவட்டத்தில் மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 06.11.2023 முதல் 27.11.2023 வரை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற உள்ள இந்த சிறப்பு முகாம் மூலம் சுமார் 1,12,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு

விதைப்பு செய்ய இயலாமை இடர் கீழ் இழப்பீடு- அமைச்சர் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)