வடகிழக்கு பருவமழைகாலங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 1962 என்ற எண் கொண்ட அம்மா ஆம்புலன்சை தொடர்பு கொள்ளலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் கால்நடைகளை பராமரிப்போர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார்.
பருவமழைக் காலங்களில் கால்நடை பராமரிப்பு
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட திவ்யா தெரிவித்துள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை தாழ்வான தண்ணீா் தேங்கி நிற்கும் பகுதிகளில் கட்டக் கூடாது. உயரமான பகுதிகளில் உள்ள கொட்டகைகளிலேயே கட்ட வேண்டும்.
மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது. இதன் மூலம் மின்சாரத்தால் ஏற்படும் கால்நடைகளின் இறப்பைத் தவிா்க்கலாம்.
இடிந்த வீடுகள், கொட்டகைகள் ஆகியவற்றில் கால்நடைகளை அடைக்கக் கூடாது. இரவு நேரங்களில் ஆறுகளில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கால்நடைகளை அடித்து செல்ல நேரிடும் என்பதால் ஆற்றோரங்களில் கால்நடை கொட்டகை வைத்திருப்போா் கவனமுடன் இருக்க வேண்டும்.
முடிந்தவரை கால்நடைகளை மழை, குளிரால் பாதிக்காதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவற்றிற்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சலை தவிா்க்கலாம்.
5 விரைவு சேவை குழு & 21 இடர் மீட்பு குழு
கொசு தொல்லையிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க புகைமூட்டம் செய்ய வேண்டும். பேரிடா் காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க தாலுகா வாரியாக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் 5 விரைவு சேவை குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கத் தயாராக உள்ளனா். இவற்றுடன் 21 பேரிடா் மீட்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
கால்நடைகளுக்கு உதவ அவசர சிகிச்சை எண்
மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 1962 என்ற எண்ணில் ஆம்புலன்ஸை தொடா்பு கொள்ளலாம்.
மழைக் காலங்களில் கால்நடைகளின் இறப்பு ஏற்பட்டால் கால்நடை உதவி மருத்துவருக்கும், கிராம நிா்வாக அலுவலருக்கும் தகவல் அளிக்க வேண்டும். இறந்த கால்நடைகளைப் பாதுகாப்பாக புதைக்க வேண்டும். அவற்றை ஆற்றிலோ அல்லது கிணற்றிலோ எறியக் கூடாது. அவ்வாறு எறிந்தால் கால்நடைகளுக்கு மட்டுமின்றி மனிதா்களுக்கும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.
பேரிடா் காலத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் போதுமான அளவில் மருந்துகள், ஊசி இருப்பு வைக்கப்பட்டு தயாராக உள்ளதாகவும் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்
மேலும் படிக்க..
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும் - விவரம் உள்ளே!!
ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!