அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 66 விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன.
பருவமழை தீவிரம் (Monsoon )
தென் மேற்கு பருவமழை பொதுவாக நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பருவமழையின் காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் ஆகும்.
இந்த காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில், அடிக்கடி கனமழைக் கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். 30 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 367 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 லட்சத்து 7 ஆயிரத்து 111ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
குறிப்பாக தேமாஜி, லக்மிபூர், பிஸ்வந்த், சோனித்பூர், சிராங், உதல்குரி, கோலாகாட், ஜோர்ஹத், மஜுலி, சிவசாகர், திப்ருகார், தின்சுகியா ஆகிய கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்காக பள்ளிக்கூடங்கள், சமூகக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சுமார் 487 முகாம்களை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் 1.25 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பூங்காவிற்குள் வெள்ளம் ( Park Flooded)
இந்நிலையில் அசாம் காஸிரங்கா தேசியப் பூங்காவிற்குள் வெள்ளம் புகுந்ததில், நீரில் மூழ்கி 66 விலங்குகள் இறந்துள்ளன. இதில் இரண்டு காண்டாமிருகங்களும் அடக்கம்.
சுமார் 430 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காஸிரங்கா தேசியப் பூங்காவின் 95 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக காஸிரங்கா பூங்காவின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மேலும் 170 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல் அம்மாநிலத்தில் உள்ள மற்ற விலங்குகள் சரணாலயங்கள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவையும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வீடுகளில் வளர்க்கப்படும் 22 லட்சம் செல்லப்பிராணிகளும், பண்ணைகளில் வளர்க்கப்படும் பல லட்சம் பறவைகளும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமானதாக இருப்பதாக அசாம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன.
மேலும் படிக்க...
பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு!
மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!