சைனேன்சியா வெருகோசா "Synanceia Verrucosa" என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த மீன் தமிழில் கல்மீன் என அழைக்கப்படுகிறது. உலகில் கொடிய விஷத் தன்மை கொண்ட மீன் வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது சினான்சீடே குடும்பத்தை சேர்ந்தது. இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவை. சீனா, ஜப்பான், ஆகிய ஆசிய நாடுகளில் இந்த கல்மீன் சுவைத்து உண்ணப்படுகிறது.
சைனேன்சியா வெருகோசா
இந்த கல்மீனானது ஆழ்கடலில் பாறைகளுக்கிடையே கற்களைப்போல் மறைந்திருக்கும். பாறைகளுக்கு இடையில் இருப்பதால் நம் கண்களை ஏமாற்றி விடும்.
இனங்கள்
இதில் ஐந்து இனங்கள் உண்டு.
நிறம்
பார்ப்பதற்கு கல் போன்று பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த மீன் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் ஆங்காங்கே காணப்படும்.
ஆயுள்
இதன் ஆயுள் 5 முதல் 10 வருடங்கள் ஆகும். நீருக்கு வெளியில் வந்தாலும் 24 மணி நேரம் உயிர் வாழும் வல்லமை கொண்டது. 14 முதல் 20 அங்குல நீளம் வரை வளரும். இரண்டே கால் கிலோ எடை வரை இருக்கும்.
வசிப்பிடம்
இதன் வசிப்பிடம் பவளப்பாறைகள் மற்றும் ஆழ்கடல் பாறைகள் ஆகும்.
முட்டைகள்
கல்மீன் நீருக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் இடும். குஞ்சு பொரித்து வெளிவந்த மீன்களை மற்ற மீன்கள் தின்று விடும். இறுதியில் தப்பித்த மீன்களே வளருகின்றன.
முட்கள்
இதன் முதுகுப்புறத்தில் கத்திபோல் 13 விஷத்தன்மை கொண்ட முட்கள் உள்ளன. இடுப்பு பகுதியில் இரண்டு முட்களும், பின் பகுதியில் மூன்று முட்களும் காணப்படும். இவை தோலுக்குள் மறைந்த்திருக்கும். ஆபத்தான நேரங்களில் முட்களை பெரிதாக்கிவிடும்.
விஷத்தன்மை
ஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பிகள் உள்ளன. சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும் போது விஷம் வெளியேறும். அழுத்தம் அதிகமாக இருந்தால் அதிக விஷம் வெளியேறும், பின் இரண்டு வாரங்களில் காலியான விஷப் பை நிரம்பி விடும்.
இதன் முட்கள் மனிதர்களை தாக்கி விட்டால், 2 மணி நேரத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, திசு அழுகல், முடக்கு வாதம், பக்கவாதம் ஏற்பட்டு விடும். விஷம் அதிகமானால் இறுதியில் மரணமே.
ஊனுண்ணி
இவை இறால் மீன்கள், பல்வகை சிறிய மீன்களை உண்ணும். இறை பக்கத்தில் நெருங்கியதும் நிமிடத்தில் விழுங்கிவிடும். மொத்த தாக்குதலும் 0.015 நொடியில் நடந்து விடும்.
எதிரிகள்
திருக்கை மீன்களும், மகா வெள்ளை சுறா, புலிச் சுறா ஆகிய பெரிய சுறா மீன்கள் இந்த கல்மீன்களை எளிதில் விழுங்கிவிடும்.
k.Sakthipriya
Krishi Jagran