Credit: 4S Milk
வெயில் அதிகரிப்பால் பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி குறைந்திருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உபத்தொழில் (Sub-industry)
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் அதைச் சார்ந்த உபத்தொழிலாக கறவை மாடு வளர்ப்பு விளங்குகிறது.
இங்கு நாட்டு மாடுகள் உள்பட பல்வேறு இன மாடுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.
கவனிக்க வேண்டியவை (Things to look out for)
கறவை மாடு வளர்ப்பில் முக்கியமானது ஆண்டு முழுவதும் தீவன பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தீவன பற்றாக்குறை ஏற்பட்டால், பால் உற்பத்தி உடனடியாகக் குறைந்து விடும்.
இந்நிலையில் சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தரிசு நிலங்கள் மற்றும் தோட்டங்களில் இயற்கையாக வளரும் புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வளர்வதில்லை. இதனால் கறவை மாடுகள் விரும்பி உண்ணும் பசுந்தீவனங்களுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பால் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கறவை மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.சிலர் தங்களது தோட்டங்களில் புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை வளர்க்கும் இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு பற்றாக்குறையைப் போக்கி வருகின்றனர்.
இது குறித்து சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் :
2 லிட்டர் வரைக் குறைந்தது (At least up to 2 liters)
கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மாறுபட்ட கால நிலையால் பயிர் சாகுபடியில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இந்த ஆண்டும் தற்போது வெயில் அதிகரிப்பால் பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை தினமும் 10 லிட்டர் பால் கறந்து வந்த மாடு, தற்போது 8 லிட்டர் மட்டுமே கறக்கிறது.
பசுந்தீவன உற்பத்தி (Fodder production)
இந்தப் பாதிப்பில் இருந்து மீள சில விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தியை பயிர் சாகுபடி போலவே மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் மலைபுல் கால்நடைகளின் பசுந்தீவன தேவையை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த வகை புல் செழித்து வளர அதிக குளிர்ச்சியும் ஈரப்பதமும் தேவை. இதனால் சுழலும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதன்மூலம் கோடைகாலத்தில் ஓரளவுக்கு பசுந்தீவன தேவையை சமாளிக்க முடியும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மேலும் படிக்க...
சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!
பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?
கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!