நாட்டு மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தின் மூலம் கை வேலைப்பாடுகளால் உருவாகும் கோவில் கோபுர சிலைகள் மற்றும் மாவிலைத் தோரணங்கள் குஜராத்திற்கு அனுப்ப உசிலம்பட்டியில் தயாராகி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன், வயது 53. இயற்கை விவசாயியான கணேசன், நாட்டு மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் கலந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கை வேலைப்பாடாகவே உருவாக்கி வருகிறார்.
மாட்டுச்சாணம், கோமியம்
நாட்டு மாட்டுச் சாணத்தில் இருந்து மாவிலைத் தோரணங்கள், பூஜை பொருள்கள், விநாயகர், சரஸ்வதி மற்றும் இயேசு போன்ற கடவுள் சிலைகள், கழுத்தில் அணியும் பாசி மாலைகள், நிறுவனங்களின் இலச்சினை போன்ற பல்வேறு பொருள்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். தற்போது குஜராத்தில் இருந்து ஆர்டர் வந்து இருப்பதால், கோயில் கோபுர வடிவமைப்பு சிலைகள், மாவிலைத் தோரணங்கள் மற்றும் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்து அனுப்பி வருகிறார்.
கைவினைப் பொருள்கள்
இயற்கை விவசாயியும், கைவினைக் கலைஞருமான பா.கணேசன் கூறுகையில், நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் கழிவுகளான மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை முதலில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். அதில் மிஞ்சுகின்ற கழிவுகளில் கலைப்பொருள்களை கைகளால் உருவாக்கி விற்பனை செய்து வருகிறேன். இயற்கைக்கு கேடு விளைவிக்காத, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உருவாகும் மாவிலைத் தோரணங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வாசலில் கட்டித் தொங்க விடுகின்றனர்.
பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் வகையில், கோயில் கோபுர சிலைகளை குஜராத்தில் இருந்து கேட்டுள்ளனர். இதற்காக கடந்த சில நாட்களாக இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள கோயில் கோபுர சிலையை, 5 தனித்தனி பாகமாக தயாரித்து ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றின் விலை ரூ.600 ஆகும். இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நல்ல மகத்துவம் கிடைக்கும் என்பதால் குஜராத்தில் இருந்து விரும்பி கேட்டுள்ளனர் என விவசாயி கணேசன் கூறினார்.
மேலும் படிக்க
குளிர்சாதனப் பெட்டியை விடவும் மண்பானை தான் மிகவும் சிறந்தது: ஆனந்த் மஹிந்திரா ட்விட்!
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்: சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு!