இயற்கையை நாம் நேசிக்கத் தொடங்கிவிட்டால், அதற்கான பலனை இந்த மண் நமக்கு அளிக்காமல் இருப்பதில்லை. அந்த வகையில், ஆசிரியரும், எம்.ஃபில் பட்டதாரியுமான ஜெயலட்சுமி, நெல், பூக்கள் மற்றும் பழங்களை இயற்கை விவசாயம் மூலம் விளைவித்து அதிக மகசூல் பெற்று, மற்ற விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரான இவர், சிவகங்கையில் 2.69 ஏக்கரில் சொட்டு நீர் பாசன முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
சம்பங்கிப்பூக்கள் சாகுபடி, பாரம்பரிய நெல் ரகமான பூங்கார், சீரக சம்பா நெல் சாகுபடி, மூலிகைச் செடிகளால் வேலி, அத்தி, முலாம்பழம், பலா, வாழை, நாட்டு கொய்யா, நாவல், மாதுளை, நொச்சி உட்பட 600 பலன் தரும் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்.
தமது தோட்டத்து எல்லையில் வலையை வேலியாக்கி, வேலியில் கற்றாழை, நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகளையும் வளர்க்கிறார். நிலத்திற்கு தேவையான உரத்தை தாமே தயாரித்துப் பயன்படுத்துவதே, அதிக மகசூலுக்கு காரணம் என்கிறார் ஜெயலட்சுமி.
மேலும் அவர் கூறுகையில், சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றினை 200 லிட்டர் தண்ணீரில் நொதிக்க செய்து, ஜீவாமிர்தம் என்ற இயற்கை உரம் தயாரித்து, பயிர்களுக்கு உரமாக இடுகிறேன். பூச்செடி, பழமரக்கன்றுகளுக்கு நடுவே விளையும் களைகளை எடுப்பதே இல்லை. செடி, கன்றுகளுக்கு அடியில் கரும்பு சக்கை, பெரிய புல்களை அறுத்துபோட்டு அவற்றையும் மக்கச் செய்கிறேன்.
அந்த இடத்தில் களை வளர்வதே இல்லை. களையை அகற்றக்கூடாது, அது தானாகவே மக்கும் உரமாக மாறி மண்வளத்தைப் பெருக்கித், தாவரங்களுக்கு ஊட்டச்சத்தைக் கொண்டுவரும் என்பதே என் நிலைப்பாடு.
இயற்கை விவசாயத்தில் தொடர்ந்து குறைந்த செலவில், நல்ல வருவாய் ஈட்டி வருகிறேன். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது. கிணற்றில் 40 அடி ஆழத்தில் பாசன வசதி பெறுகிறேன். அதனால், எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது.
செயற்கை உரங்கள் மூலம் சம்பங்கிப்பூ சாகுபடி செய்த விவசாயிகள், 2 ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ பூக்களை பெறும் நிலையில், ஜெயலட்சுமியோ, இயற்கை விவசாயம் மூலம் 30 சென்ட் நிலத்தில் தினமும் 8 கிலோ சம்பங்கிப்பூக்களை அறுவடை செய்கிறார்.
இயற்கை விவசாயத்தைத் தொடங்கியபோது, மண்ணே தமக்கு பெரும் சவாலாக இருந்ததாகக் கூறும் ஜெயலட்சுமி, சமூக அக்கறையோடு, இயற்கை ஆர்வலாக விவசாயத்தை செய்துவருவதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார்.
லாப நோக்குடன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என யோசனை கூறும் ஜெயலட்சுமி, நமக்கான நஞ்சில்லா உணவுப் பொருளை, நாமே தயாரிக்க வேண்டும் என்ற நோக்குடன் விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஆரோக்கியமான குடும்பத்தை மட்டுமல்ல, ஆரோக்கியமான சமூதாயத்தையும் நிச்சயம் ஏற்படுத்த முடியும். அதற்கு எனது ஆசிரியர் தொழில் பேருதவி புரியும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
பைசா செலவில்லாமல் இயற்கை உரங்கள்- சமயலறைக் கழிவுகளில் இருந்து! தயாரிப்பது எப்படி?
மண்பாண்டங்களின் மகத்துவங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம் உங்கள் கையில்!