மண்ணின் வளத்தைக் காக்க ஏதுவாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர், அரசின் ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், தேசியத் தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் கொத்தமல்லி உள்ளிட்ட கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500ம், தக்காளி, கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்டக் கொடிவகைக் காய்கறிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இது தவிர இயற்கை விவசாயச் சான்று பெறுவதற்கு ரூ.500 வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகையைப் பெற, விவசாயிகள் தனியாகவும், குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் உழவன் செயலி அல்லது www.thortet.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெறலாம் என்றும், விரைவாக விண்ணப்பிக்குமாறும், வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் - C உணவுகள்- FSSAI வழிகாட்டுதல்கள்!