2024-25 ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிரிடப்பட்ட நெற் பயிரினை காப்பீடு செய்ய நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வெறும் 20 சதவீத அளவிலான ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
PMFBY இத்திட்டமானது 2016-இல் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு குறைவான பிரீமியத்தில் விரிவான பயிர் காப்பீட்டுத் தொகையை இத்திட்டம் வழங்குகிறது. இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் அல்லது நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. இதனிடையே சம்பா பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீடு கால நீட்டிப்பு செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
20 சதவீத ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25 ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 91,835 ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 15 ஆம் தேதி பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் 18,938 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
மேலும் நடவு பணிகள் தாமதமாக ஆரம்பித்த காரணத்தினாலும், மழை பொழிவு தாமதமாக உள்ள காரணத்தினாலும், இன்னும் 15 நாட்களுக்கு பயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு தொகை எவ்வளவு?
விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.566/-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் நடப்பு ரபி மற்றும் சிறப்பு பருவத்திற்கு ஷீமா (KSHEMA GIC) பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதில் உள்ள நடைமுறைகள் அனைத்து விவசாயிகளுக்கும் உகந்ததாக இல்லை என்பதோடு, உரிய நேரத்தில் இழப்பீடு கைக்கு வந்து சேர்வதும் இல்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், வாகனங்களுக்கான காப்பீடு, மனிதர்களின் ஆயுள் காப்பீடு போல் தனி நபர் பயிர் காப்பீடு வந்தால் மட்டுமே இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்படையும் விவசாயிகள் முழுமையாக மீள முடியும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read more:
நிழல்வலைக்கூடத்தில் CO 18009 புன்னகை கரும்பு இரக நாற்று உற்பத்தி- 50% மானியம்!