விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் அலுவலகங்களில் விதை தட்டுப்பாடு இருப்பதால், வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு பொருளுக்குமே செயற்கையாகத் தடுப்பாடு வரும்போது, அதன் விலை கடுமையாக உயர்த்தப்படும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு (Vulnerability to customers)
ஒரு வேளை இயற்கையாகவேத் தட்டுப்பாடு வரும் காலங்களிலும், இதே யுக்தியைப் பயன்படுத்தி சம்பாதிக்க விரும்புகிறார்கள் வியாபாரிகள். அதனால் எப்போதெல்லாம் தட்டுப்பாடு வருகிறதோ, அப்போதெல்லாம் கடுமையாக பாதிக்கப்படுவது அப்பாவி வாடிக்கையாளர்கள்தான்.அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விதைத் தட்டுப்பாடு, ஏழை விவசாயிகளுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயம் (Agriculture)
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மொத்த பரப்பளவான 7,22,203 ஹெக்டேரில், 3,37,305 ஹெக்டேர் (45 சதவீதம்) பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
கரும்பு, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சாகுபடி செய்தாலும், மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40 சதவீதம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தப்படியாக, காராமணி, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் உற்பத்தி திறனில் 850 கிலோ சராசரி மகசூல் பெற்று, மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.
விதைத் தட்டுப்பாடு (Seed shortage)
பயிர் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள் வேளாண் அலுவலகங்களில் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும் நேரத்தில் விவசாயிகள் பயிரிடும் வெள்ளைப் பொன்னி, எ.டி.ட்டி.53, ஏ.டி.ட்டி-37, கோ-51 போன்ற ரக விதைகள் கிடைப்பதில்லை.வட்டார வேளாண் அலுவலகங்களில் விவசாயிகள் கேட்டால், ஏதோ ஒரு விதையை கொடுத்து இதுதான் இருப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்ட போது, குறிப்பிட்ட ரக நெல் விதை தட்டுப்பாடு இருப்பதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.விதைப் பண்ணை நிறுவனங்களோடு சிண்டிகேட் அமைத்து, வேளாண் அலுவலகங்களுக்கு வரும் விவசாயிகளை கட்டாயமாக, குறிப்பிட்ட பண்ணைகளில் விதைகளை வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தரமற்ற விதைகள் (Non-standard seeds)
தனியார் நிறுவனங்களில் வாங்கும் விதைகளில் 30 சதவீதம் தரமற்றவையாக இருப்பதால் போதிய மகசூல் கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் கலிவரதன் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவு காராமணி சாகுபடி செய்கின்றனர்.
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியில் விழுப்புரம் முன்னிலையில் உள்ளது. ஆனால், வட்டார வேளாண் அலுவலகங்களில் காராமணி விதை இருப்பு இல்லை. எள், வேர்க்கடலை விதை மட்டுமே வைத்துள்ளனர். விவசாயிகள் அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களில் தான் வாங்க வேண்டியுள்ளது.அதேபோல், தோட்டக்கலைத்துறை சார்பில் கத்தரி, வெண்டை, அவரை, முருங்கை, கொத்தவரை போன்ற விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
அலைக்கழிப்பு (Oscillation)
ஆனால், விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத்துறையில் மானிய விதைகள் வழங்குவ தில்லை. மேலும், மாடி தோட்டத்திற்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்களும் சரியான முறையில் வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இதை மாவட்ட ஆட்சியர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகளின் புகார் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட வேளாண் அலுவலகங்களில் விதைகள் தேவைக்கு ஏற்ப இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில ரக விதை தட்டுப்பாடு உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும்.தரமற்ற விதைகள் குறித்த புகார் தொடர்பாக அவ்வப்போது, தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!