50 சதவீத மத்திய அரசின் நிதியுதவியுடன் மற்றும் சுயநிதி முறையிலும் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பட்டயப்படிப்பு மேற்கொள்ள விருப்பமுள்ள தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE), 2003-ஆம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப்படிப்பினை நடத்தி வருகிறது.
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினைப் பெற்றிருப்பதில்லை.
பட்டப்படிப்பின் அவசியம் என்ன?
தற்போது மாறி வரும் தட்ப வெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்குகின்றன. எனவே வேளாண்மையில் அவர்களது தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பெறும் வகையிலும், தேவையை அறிந்து தேவையான இடுபொருட்களை சரியான தருணங்களில் விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு துணையாக விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல் புரியவும் மேற்கண்ட ஓராண்டு பட்டயப் படிப்பினை ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றது.
படிப்புக்கு மத்திய அரசின் நிதியுதவி:
இந்த படிப்பு, மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையம்(சமிதி) மூலம் வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட்ட இணைப்பு பயிற்சி நிலையங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு திட்ட இயக்குநர் (அட்மா)வும் இணைப்பு பயிற்சி நிலையங்களாக வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தப் படிப்பு சுயநிதி மூலமாகவும் மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியுடனும் நடத்தப்பட்டு வருகின்றது. குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் இல்லை.
Read more: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
கல்விக்கட்டணம் எவ்வளவு?
சுயநிதி முறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000/-ம், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதி மூலமாக பயில்வதாக இருந்தால் ரூ.10,000/-ம், வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலமாக படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ.10,000/-ம், மீதமுள்ள ரூ.10,000/-த்தில் மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ.5,000/- வீதம் படிப்புத் தொகையாக கட்ட வேண்டும்.
வகுப்பறைகள் நடப்பது எப்படி?
இந்தப் படிப்பு, வாராந்திர வகுப்புகளாக, அதாவது வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். ஒரு அணிக்கு கட்டாயம் 40 நபர்கள் இருக்க வேண்டும். மொத்தம் 48 நாட்களில் 40 நாட்கள் (80 வகுப்பறை வகுப்புகளும்), 8 நாட்கள் கண்டுணர்வு வகுப்புகளும் நடத்தப்படும்.
Read more: அடிமாட்டு விலைக்கு போகும் சின்ன வெங்காயம்- வேதனையில் தமிழக விவசாயிகள்
இந்த படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (அட்மா) அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலில் வரும் 40 நபர்களுக்கு தென்காசி மாவட்டத்திலேயே இந்த பட்டயப் படிப்பினை நடத்திட ஆவன செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Read more: சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்