1. வெற்றிக் கதைகள்

விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
saravanan

அலங்கார மீன் வளர்ப்பு, விவசாயம் என பன்முகத் தன்மையுடன் செயல்பட்டு வருபவர் சரவணன். தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் பகுதியிலுள்ள க்கமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் சமீபத்தில் க்ரிஷி ஜாக்ரான் சார்பில் நடைப்பெற்ற மில்லினியர் விவசாயி விருதினை வென்றார்.

12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சரவணன் குடும்பச்சூழ்நிலை காரணமாக சென்னையிலுள்ள தனது உறவினர் நடத்தி வந்த மளிகைக்கடையில் வேலை செய்யத் தொடங்கினார். எதிர்ப்பாராத விதமாக இவரின் தந்தை மறைந்ததையடுத்து, தன் தந்தை குணசேகரன் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் சரவணன் வசம் வந்தது.

சிறு வயதிலிருந்தே மீன் வளர்ப்பில் ஆர்வம்:

தனது சிறு வயது முதலே மீன் வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்த சரவணன், விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய நிலையில் மீன் வளர்ப்பு பண்ணை அமைப்பதிலும் தனது கவனத்தை செலுத்தினார். வாழை, எலுமிச்சை, தென்னை, பூசணி, நெல்லி போன்றவற்றை தனது நிலத்தில் பயிரிட்டுள்ள சரவணன், அதி நவீன வேளாண் நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அந்த வகையில், தனது நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பு மூலம் பயிர்களுக்கு நீர் பாசனம் மேற்கொள்வதோடு, தானியங்கி முறையில் இயங்கும் ஆட்டோமெட்டிக் வால்வும் அமைத்து இருக்கிறார்.

மொபைல் மூலம் இருந்த இடத்தில் இருந்தே நீர் பாசன முறைகளை மேற்கொண்டு வருகிறார். பசுமைக்குடில் அமைத்துள்ள சரவணன், அவற்றில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார். விளைவிக்கும் வெள்ளரிகளை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறார். அதோடு, தன் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைத்தார்களை, பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்னும் FPO மூலம் அண்டை மாநிலங்களில் விற்பனை செய்கிறார்.

ஒரு புறம் விவசாயத்தில் நல்ல முறையில், அதி நவீன தொழில்நுட்பத்துடன் ஈடுபட்டு வரும் சரவணன், மற்றொரு புறம் மீன் வளர்ப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார் என்றுதான் கூற வேண்டும். SIDHA AQUA GARDEN என்கிற நிறுவனத்தை நிறுவி சிக்லிட் என்கிற மீன் ரகத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வருவதோடு இந்தியா முழுமைக்கும், அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த சிக்லிட் மீன் இனத்தில் மட்டும் ஏறத்தாழ 120-க்கும் மேற்பட்ட மீன் வகைகளை உற்பத்தி செய்கிறார். கண்ணாடி தொட்டி, சிமெண்ட் தொட்டி மற்ற பிற வகைகளிலும் இந்த மீன் வகைகளை வளர்த்து வருகிறார்.

Read more: விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண்- முதல்வர் சொன்ன குட்நியூஸ்!

சிறந்த மீன் பண்ணையாளருக்கான விருது:

தற்போது மில்லினியர் விவசாயி விருதினை பெற்றுள்ள சரவணன், MPEDA (Marine Products Export Development Authority) சார்பில் வழங்கப்படும் அகில இந்தியா அளவில் சிறந்த மீன் பண்ணயாளருக்கான விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள மீன்வளக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், சரவணன் நடத்தி வரும் மீன் பண்ணைகளில் 3 மாத காலம் தங்கி பயிற்சியும் பெற்று வருகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களுக்கு மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும், விழிப்புணர்வினையும் சரவணன் வழங்கி வருகிறார். நபார்டு மூலமாக வழங்கப்படும் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சியும், இவரது மீன் பண்ணையில் வைத்து வழங்கப்படுகிறது.

Read more: வெள்ளத்தில் உயிரிழந்த ஆடு- மாடு: புதிய கால்நடை வாங்க கடனுதவி!

15 KW - சோலார் மேற்கூரை அமைத்து அதன் மூலம் மீன் பண்ணைகளுக்கான மின் தேவையினை பூர்த்தி செய்து வருகிறார். தன்னிடமுள்ள மொத்தம் 14 ஏக்கரில், 2 ஏக்கரை அலங்கார மீன் வளர்ப்பு பணிக்காக ஒதுக்கியுள்ளார். மீதமுள்ள ஏக்கரில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

விவசாயம், மீன் வளர்ப்பு பணிகளில் சிறு வயதிலயே கால் பதித்த சரவணன், இன்று தனது அயராத உழைப்பினால் அவற்றில் வெற்றிக் கண்டதுடன் லாபகரமான தொழில் முனைவோராகவும் வலம் வருகிறார். மேலும் தொலைத்தூரக் கல்வி வாயிலாக BBA படித்து பட்டம் பெற்றுள்ளார். இவரின் அர்ப்பணிப்பு உணர்வு மீன் வளர்ப்பு பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நாம் நம்பலாம்.

Read more: கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை- ஆண்டுக்கு 25 கோடி வருமானம்!

English Summary: Thoothukudi Saravanan is amazing in ornamental fish farming with agriculture Published on: 31 December 2023, 05:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.