சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது தமிழில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என அழைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக நிதி அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட சிறு வைப்புத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கும், இணைய விரும்புபவர்களுக்கு நற்செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது அரசு.
கடந்த 22 ஜனவரி 2015 ஆம் ஆண்டு அன்று பிரதமர் மோடியால், SSY திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க பெற்றோர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், சுகன்யா சம்ரிதி யோஜனா வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் எவ்வளவு உயர்வு?
புதிய அறிவிப்பின் படி, சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தின் வட்டி விகிதமானது- ஜனவரி-மார்ச் காலாண்டில் 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கு தற்போதுள்ள 8 சதவீத வட்டி விகிதமானது, புதிய அறிவிப்பின் படி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தபால் நிலையங்களால் இயக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் மறுவரையறை செய்வது குறிப்பிடத்தக்கது.
SSY கணக்கு திறப்பது எப்படி?
அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளின் கிளைகள் மூலமாகவோ SSY-க்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் மட்டுமே கணக்கைத் திறக்க முடியும். பெண் குழந்தை 10 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் சார்பில் இரண்டு SSY கணக்குகளை திறக்க முடியும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ₹250; அதிகபட்ச முதலீடு ஆண்டுக்கு ₹1,50,000 வரை ஆகும். முதிர்வு காலம் 21 ஆண்டுகள். இத்திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், டெபாசிட் செய்யப்பட்ட அசல் தொகை, முழு முதிர்வு காலத்தின் போது பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வு பலன்களுக்கு வரிவிலக்கு உண்டு. ஒரு முதலீட்டாளர் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஒரே நிதியாண்டில் SSY கணக்கில் முதலீடு செய்த ₹1.50 லட்சம் வரை வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 2.73 கோடிக்கு மேல் கணக்குகள் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட ₹ 1.19 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
Read more: விவசாயிகளுக்கு நற்செய்தி- நபார்டு வங்கி சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
ஒரு பெண் 18 வயதை அடைந்த பிறகு, ஒரு நிதியாண்டில் பாதுகாவலர்கள் கணக்கில் இருந்து 50% வரை பணத்தை முன்கூட்டியே எடுக்கும் வசதியும் உள்ளது. அதைவிட இந்த திட்டமானது ஒன்றிய அரசின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 100 சதவீத உத்தரவாதம் கிடைக்கும்.
Read more: விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண்- முதல்வர் சொன்ன குட்நியூஸ்!