நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் எவ்வித காரணங்களுக்கு எல்லாம் பயிர் இடர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன என்பது தொடர்பான முழு விளக்கத்தையும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவூபடுத்தப்பட்டுள்ளது.
1.விதைப்பு, நடவு, முளைவிடும் ஆபத்துகள் தடுக்கப்பட்டது: காப்பீடு செய்யப்பட்ட பகுதியில் மழை பற்றாக்குறை காரணமாக அல்லது பாதகமான பருவநிலை/வானிலை நிலவரங்கள் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
2.நிலைப்பயிர் (விதைப்பு முதல் அறுவடை வரை): வறட்சி, வறண்ட நிலைகள், வெள்ளம், வெள்ளப்பெருக்கு, பூச்சி மற்றும் நோய்களின் பரவலான தாக்கம், நிலச்சரிவுகள், இயற்கை தீ, இயற்கை மின்னல், புயல், ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி முதலான பேரிடர் காரணமாக மகசூல் இழப்பிற்கு எதிராக ஓர் விரிவான ஆபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
3.அறுவடைக்கு பிந்தைய இழப்புகள்: ஆலங்கட்டி மழை, புயல், புயல் மழை மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக அறுவடைக்கு பிறகு நிலத்தில் வெட்டி உலர்த்துவதற்காக, சிறு கட்டுகளாக கட்டுவதற்காக பரப்பி வைக்கப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்திருக்கும் நிலையில் அதிகபட்சமாக 14 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
4.உள்ளூர் பேரிடர்: குறிப்பிடப்பட்ட பகுதியில் ஆலக்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, இடிமின்னல், மழை மற்றும் மின்னல் காரணமாக இயற்கை தீ போன்ற உள்ளூர் பேரழிவுகள் காரணமாக உண்டாகும் பயிர் இழப்பு/சேதத்திற்கு தனிப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு கொண்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காப்பீடு செய்து கொண்ட விவசாயி சம்பவத்தின் 72 மணி நேரத்திற்குள்ளாக காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமற்ற எண் : 1800 2660 700 எண்ணினை அழைத்து நேரிடையாக தெரிவிக்க வேண்டும் அல்லது வங்கி/ தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். விவசாயியினால் முழு விவரமும் 72 மணி நேரத்திற்குள் வழங்கப்படவில்லை என்றால், பின்னர் குறிப்பிடப்பட்ட படிவத்தில் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு விவசாயியினால் முழுமையான தகவல் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீரிமியம் தொகையாக ஒரு ஏக்கருக்கு உருளைக்கிழங்கு ரூ.5223/-, வாழை ரூ.4623/-, முட்டைகோஸ் ரூ.3960/-, கேரட் ரூ.3880/- பூண்டு ரூ.5288/- மற்றும் இஞ்சி ரூ.4843/- செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.01.2024 (முட்டைகோஸ்), 15.02.2024 (உருளைக்கிழங்கு & பூண்டு) மற்றும் 29.02.2024 (வாழை, கேரட், இஞ்சி). எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தங்களின் பயிர்களை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
கொட்டும் மழையில் மிளகு- வாழை மரத்தை பாதுக்காக்க சூப்பர் டிப்ஸ்
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?