கொரோனா காலத்திலும் எதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும் என்று எண்ணுபவரா நீங்கள்? அதுவும் அரசின் முதலீட்டு திட்டமாகவோ அல்லது அரசு வழிகாட்டுதலை உள்ளடக்கியத் திட்டமாகவே இருந்தால் போதும் என்று நினைப்பவரா? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்குதான்.
பேப்பர் கோல்டு (Paper Gold) எனப்படும், ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கிக் குவிக்கும், தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
பிசிகல் தங்கத்தின் (Physical gold) தேவையினைக் குறைக்கும் பொருட்டும், முதலீடாக தங்கத்தை வாங்க விரும்புவோருக்கு, வட்டிகொடுத்து ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிசிகல் தங்கம் என்பது நம்முடைய கையில் இருக்கும் தங்க ஆபரணங்கள், நாணயங்கள், தங்கக்கட்டிகள் ஆகியவை.
அதுவும் நெருக்கடியான காலகட்டங்களில் கவர்ச்சிகரமான பாதுகாப்பு முதலீடாக பார்க்கப்படுவது தங்கம் தான்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆபரணமாகவோ அல்லது நாணயமாகவே தங்கத்தை வாங்கிக்கொண்டு, லாக்கரிலோ, அல்லது வீடுகளிலோ வைத்து பாதுகாப்பது தடுக்கப்படுகிறது. உதாரணமாக லாக்கரில் வைத்து பாதுகாத்தால், லாக்கர் வாடகை உள்ளிட்ட செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வீட்டில் வைத்தால், திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சிறந்த முதலீடு
அனுதினமும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் தங்கத்தின் விலையானது இனி வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த வேளையில் தங்க சேமிப்பு பத்திரமானது மிகச்சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
கடைசி தேதி?
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், ஐந்தாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. வரும் 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது .
ஆன்லைனில் வாங்கலாம் (Online Purchase)
தங்கப் பத்திரங்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் வழங்கப்படுகிறது.
விலை நிர்ணயம்? (Rate)
தங்க பத்திர விற்பனை தொடங்கப்படும் நிலையில் 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு முதலீடு?
-
பொதுவாக ஒரு நிதியாண்டில் தனிநபர் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
-
அதேநேரத்தில் அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கிக் கொள்ள முடியும்.
-
இந்த பத்திரங்களைக் கொண்டு இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ (National Stock Exchange) மற்றும் பிஎஸ்இயில் (Bombay Stock Exchange) வர்த்தகம் செய்து கொள்ளலாம். பிணையமாக வைத்தும் கடன் வாங்கலாம்.
-
இந்த திட்டத்தின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டில் இருந்தே விரும்பினால் வெளியேறிக்கொள்ளலாம்.
வட்டி எவ்வளவு?
தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் எனப்படும் வரிப்பிடித்தம் செய்யப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது.
எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால், நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாகவும் மாற்றலாம். இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் (Capital Tax)உண்டு.
மேலும் படிக்க...
தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கம் திட்டம் - மத்திய அரசு வழங்குகிறது!