கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணைகள் அமைத்து அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிலக்கடலைப் பருப்பில் 26% புரதமும் 45-50 % எண்ணெய்சத்தும் இருப்பதால் சத்து மிகுந்த உணவாக கருதப்படுகிறது. இதைத்தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு துத்தநாகம் மற்றும் போரான் சத்துக்களும் நிறைந்துள்ளன.
நாளுக்கு நாள் எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இதனைக் கருத்தில்கொண்டு, உயர் ரக விதைகளைத் தேர்வு செய்து தக்கப் பருவத்தில் சாகுபடி செய்தால், அதிக லாபம் ஈட்ட நிலக்கடலை நிச்சயம் கைகொடுக்கும்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர். இரா.ஆனந்த செல்வி கூறியதாவது:
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் இந்தக் கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலைப் பயிரில் விதைப்பண்ணைகள் அமைக்கலாம்.
-
விதைப்பண்ணை அமைக்கத் தேவையான ஆதார நிலை விதைகளை அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
-
விதைகள் வாங்கும் போது காலாவதி தேதியைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
-
விதை மூட்டைகளில் உள்ள சான்று அட்டைகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, விதைப்பண்ணையைப் பதிவு செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
-
விதைப்பண்ணைகளை, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
-
நிலக்கடலை காய்களில் உள் ஓடு 75-80 சதவீதம் கருமை அடைந்திருந்தால் அறுவடை செய்யலாம்.
-
மழைக்காலங்களில் காய்கள் முளைக்க ஆரம்பிக்குமானால் 75-80% முற்றும் வரை காத்திருக்கத் தேவையில்லை.
-
காலம் கடந்து அறுவடை செய்வதால் காய்கள் நிலத்தில் தங்குவதுடன் காய்களின் தரமும் குறைந்து விடுகிறது.
-
செடிகளை நிலத்தை விட்டு பிடுங்கிய பின் காய்கள் மேல்பக்கம் இருக்குமாறு போட்டு 2-3 நாட்கள் கழித்து காய்களைப் பறிப்பது அவசியம்.
-
இவை 3-4 நாட்கள் நன்றாக உலர்த்திய பின் சாக்குப்பைகளில் சேமிக்க வேண்டும்.
-
நல்ல காற்றோட்டமுள்ள எலிகள் புகாத சேமிப்பு அறையில், தரையில் மரப்பலகைகளை வைத்து அதில் மூட்டைகளை சுவரில் படாதவாறு அடுக்கி வைக்க வேண்டும்.
-
அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட நிலக்கடலை இரகங்களுக்கு அரசு உற்பத்தி மானியமும் வழங்கி வருகிறது.
-
எனவே விதைப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
அழகுக்கு அரிசித் தண்ணீர்! நம்ப முடிகிறதா?