நம்முடைய விவசாயிகள் பசுவின் கோமியத்தை தெய்வீகமாக தான் பார்க்கிறார்கள்.ஒரு நாட்டு பசுமாட்டின் சாணமும் கோமியமும் இருந்தால் எந்த உரமும் போடாமலே 30 ஏக்கர் அளவில் விவசாயம் நன்றாக செய்ய முடியும் என்று நம்முடைய வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கோமியத்தை வெறுமென தெளித்து பூச்சி விரட்டியாக பயன்படுத்தும் நடைமுறை நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் உதவும் கோமியம், பஞ்சகாவ்யா தயாரிப்பில் கூட முக்கிய மூலப்பொருளாக திகழ்கிறது. இந்நிலையில் கோமியத்தை தாவரங்களுக்கு எப்படி பயன்படுத்துவது, அவற்றினை தெளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கோமியத்தை சேகரிக்கும் முறை:
கோமியத்தை கொள்கலனில் சேகரிக்க வேண்டும்.மருத்துவ பயன்பாட்டிற்கு சேகரிக்க வேண்டுமானல் முதல் தடவை மற்றும் கடைசி தடவை கோமியத்தை சேகரிக்கக்கூடாது. அதனை தூய்மையான வெள்ளைத்துணியால் வடிகட்டிய பிறகு பயன்படுத்த வேண்டும். கோமியத்தில் 95% நீரும், யூரியா 2.5 சதவீதமும், இதர தாதுகள் மற்றும் என்சைம்கள் (கிரியோடின், ஆரம் ஹைட்டிராக்ஸ்டு மற்றும் கால்சியம் மெக்னிசியம்) 2.5% என்றளவில் உள்ளது.
தாவரங்களுக்கு எப்படி பயன்படுத்துவது?
1)கோமியத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை நீர்த்து போகச் செய்து பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு பங்கு கோமியத்துடன் 10 பங்கு நீர் கலக்கினால் அதனுடைய செறிவு தன்மை ( அடர்த்தி) குறையும்.
2) நீர்த்து போன கோமியத்தை தாவரத்தின் இலைகள், கிளைகள் மற்றும் தண்டுகளின் மீது தெளிக்கலாம். இப்படித் தெளிப்பதன் மூலமாக தாவரங்களில் இலை வழியாக கோமியத்தில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படும்.
3) கோமியத்தை தாவரத்தின் வேர் பகுதிக்கும் மண்ணிலும் தெளிக்கலாம். நீர்ப்பாசனம் செய்யும் கோமியத்தின் சத்துகள் தாவரங்களால் எடுத்துக் கொள்ளப்படும்.
பயன்படுத்தும் அளவு:
தொடக்கத்தில் பசுவின் கோமியத்தை தாவரங்களுக்கு சிறிதளவு பயன்படுத்தி பார்த்த பின் அதனால் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். ஏதேனும் பாதிப்பு (இலை வாடல், கருகல்) ஏற்பட்டால் தெளிக்கக்கூடாது. வேப்ப இலைகளுடன் கலந்து பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.
Read also: அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?
தெளிக்கும் சமயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை?
- நாம் பச்சையாக உண்ணும் காய்கறி வெள்ளரி பழங்களின் மீது இதனை தெளிக்கக்கூடாது.
- இளம் செடிகள், தண்டுகள் மற்றும் கீரை போன்ற மென்மையான பாகங்களில் இதனை தெளிக்கக்கூடாது.
3) உண்ண முடியாத பாகங்கள் உள்ள செடி, கொடிகள், பயிர் வகைகள் மற்றும் அலங்கார வகைகளில் தெளிக்கலாம்.
நம்முடைய நாட்டில் ஆயுர்வேத மருத்துவத்திலும், நைஜீரியா மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள நாட்டுபுற மருத்துவர்கள் தங்களுடைய மருந்து தயாரிப்பில் கோமியத்தை பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் கோமியம் எளிதாக கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கால சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு காரணம், கால்நடை வளர்ப்பு அதுவும் நாட்டு பசு மாடு வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் கூட வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் கோமியத்தை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயப் பெருமக்கள் நாட்டு மாடுகளை வளர்த்து அவற்றின் மூலமாக கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு பொருளை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என அக்ரி சு.சந்திர சேகரன் (வேளாண் ஆலோசகர்) தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம்/ முரண் இருப்பின் அக்ரி சு.சந்திர சேகரன் (வேளாண் ஆலோசகர்) அவர்களை தொடர்புக் கொள்ளலாம். (தொடர்பு எண்: 9443570289)
Read more: