உணவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் "அமுதம்" பல்பொருள் அங்காடிகளில் மளிகை, சமையல் எண்ணெய் முதலானவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் விற்கப்படும் விலையானது சந்தை விலையைவிட குறைவாக இருக்கிறது. தற்பொழுது சென்னையில் 25 இடங்களில் இவ்வங்காடி செயல்பட்டு வருகின்றது.
சென்னை மண்டலத்தில் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி, துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு, ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று வாங்கிச் சென்றுகொண்டு இருக்கின்றனர்.
தக்காளி மற்றும் பருப்பு வகைகளின் விலை அதிகரித்து இருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் உணவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தக்காளி முதலானவை பெறப்படும் கொள்முதல் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்பொழுது வெளிச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை சற்று உயர்ந்து இருப்பதால், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் கூடுதலாக 20 அங்காடிகளும் ,ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு அமுதம் அங்காடி துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க
NABARD Bank: கிராம மக்களுக்கு உதவும் வங்கி! தனது 42 வயதைக் கடந்தது!