2021-22ம் ஆண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விருப்பத்தை மத்திய உரங்கள் துறை முன்மொழிந்தது. அனுமதிக்கப்பட்ட, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகள், அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து அமலுக்கு வரும்.
உர விலைப் பட்டியல்
நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.18.789. பாஸ்பரஸ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.45.323, பொட்டாஷ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.10.116, கந்தக உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.2.374.
மானிய விலையில் வழங்க ஒப்புதல்
யூரியா மற்றும் 22 வகையான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மூலம் மத்திய அரசு மானிய விலையில் கிடைக்கச் செய்கிறது. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊட்டசத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஏற்ற அணுகுமுறையின் படி, பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்த மானியம் உரக் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த கூடுதல் மானியம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.14,775 கோடி செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
தஞ்சையில் பருத்தி ஏலம் அடுத்த வாரம் தொடக்கம்!
தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?