தருமபுரி மாவட்டத்தில் தெண்பெண்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட K.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரிநீரை நீரேற்றும் முறையின் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திங்கட்கிழமையான இன்று காலை 10:30 மணியளவில் தருமபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?
தருமபுரி மாவட்டம், தெண்பெண்னை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள K.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரிநீரை மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள சுமார் 66 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்தை அமைக்க பல ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் இந்த திட்டத்திற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூபாய் 410 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அதன்பின் இந்த திட்டத்தினை ஆளுகின்ற அரசு கிடப்பில் போட்டுவிட்டார்கள். இது தொடர்பாக அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயபால் தலைமையில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் சங்க செயலாளர் இரா.பிரபாகரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், ஏர்முனை இளைஞரணி, பொதியன்பள்ளம் அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம், மொரப்பூர் வட்டார பாசன விவசாயிகள் சங்கம், தமிழக கறிக்கோழி விவசாயிகள் சங்கம், அணைத்து வணிகர்கள் சங்கத்தினர் திரளாக பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
எனவே மாநிலத்தில் ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு இந்த திட்டத்தினை உடனடியாக செயல்படுத்திட வேண்டியும், மக்களின் வாழ்வாதாரம் காக்க எதிர்கால சந்ததிகள் வாழ வழி வகுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பின் படி நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு போராட்டம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் காண்க:
தேர்வில் நூற்றுக்கு நூறா? மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் காத்திருக்கு பரிசு.. விவரம் உள்ளே
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்- மேயர் பிரியா அறிவிப்பு