Credit: You Tube
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தமிழகத்தின் பல அணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனைத்தொடர்ந்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால், காவிரி ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவைக் கடந்து மேட்டூர் அணையை வந்தடைந்தது. இவ்வாறாக, கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97 அடியைத் தாண்டிவிட்டது. தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்வரத்து விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Credit:The Hindu
முல்லை பெரியாறு அணை
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் 136 அடியை தாண்டியதால் அங்குள்ள 13 மதகுகளை முட்டியபடி தண்ணீர் பாய்கிறது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அங்குள்ள தேக்கடி ஏரி தற்போது கடல்போல் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது. ஏரியில் படகு சவாரிக்கு மக்கள் செல்லும் நடைமேடை வரை தண்ணீர் நிற்கிறது.
பவானிசாகர் அணை
இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து கிடு கிடுவென அதிகரித்து, நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.
Credit: Deccan Chronicle
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தண்ணீர் திறக்க உத்தரவு
இதனிடையே முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு இன்று (புதன்கிழமை ) முதல் 9.12.2020 வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
மேலும் படிக்க...
மனம் மயக்கும் ரோஜா சாகுபடி செய்து எப்படி?- எளிய வழிமுறைகள்!
பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!