சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு கங்கை திட்டம் (Telugu-Gang Project)
தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே கடந்த 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி நீரை, ஆந்திரா வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தின்படி ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து சோமசீலா, கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ. தொலைவு திறந்தவெளி கால்வாயில் பயணித்து கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது.
பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, ‘ஜீரோ பாயின்ட்’ என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்கு தண்ணீரை எடுத்து செல்ல, 25 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.
மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டிஅணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் லிங்க் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.
பூண்டி அணை (Poondi Dam)
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது இந்த நீர்தேக்கம் தான். கடந்த , 1944ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் சத்தியமூர்த்தியின் முயற்சியால், ரூ.65 லட்சம் மதிப்பில் பூண்டி ஏரி என்ற சத்தியமூர்த்தி நீர்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, பூண்டி அணையின் உயரம் 35 அடி ஆகும். அதற்கு பிறகுதான், புழல், சோழவரம் ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணி துறை அலுவலகம் அருகிலேயே உள்ளது.
பராமரிப்பின்மை (Lac of Maintenance)
உயரதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு விருந்தினர் மாளிகை உள்ளது. அருகிலேயே பொதுப்பணித்துறை அலுவலகம், விருந்தினர் மாளிகை என அனைத்தும் இருந்த தோதிலும், ஏரியை பராமரிக்க அதிகாரிகள் தகுந்த முயற்சி மேற்கொள்ளவில்லை. அவ்வாறு, கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கனமழை பெய்தபோதிலும், கொழுந்தலூர் பகுதியில் ஏரிக்குள் இருந்த மரங்களை வெட்டி மேடான பகுதியை தூர்வாராமல் விட்டுவிட்டதால், அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் கிடந்தது. இதனால், ஏரியானது கனமழையால் முழு கொள்ளளவை எட்டியும், ஏரியின் மறுபுறம் தண்ணீரை சேமிக்க இயலாத அவலநிலை ஏற்பட்டது.
மண்மேடான பூண்டி (Dry land)
தற்போதும் அப்பகுதியை தூர்வாராமல் விட்டுவிட்டதால் மண் மேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, ஏரியில் மாடுகளை மேய்த்தும், இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி, ஏரியின் முழு கொள்ளளவு நீர், இருப்பு உள்ளதா என்பது கேள்வி குறியாக உள்ளது.
மக்கள் கோரிக்கை (People Demand)
அதே நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியில் மேடான பகுதியை தூர்வாரி சரியான அளவு மழைநீரை சேமிக்க இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...
கால்நடை விவசாயத்தை லாபகரமாக மாற்ற சில டிப்ஸ்!!
பசுவிற்கு ஏற்படும் கீட்டோஸிஸ் நோயை தடுக்கும் மருத்துவ மேலாண்மை முறைகள்!
தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று! கட்டுக்கடங்காமல் போனால் நிலைமை என்னவாகும்?