தமிழகத்தில் கொரோனா நெருக்கடியால் வாழ்விழந்து நிற்கும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் விரைவில் மூடப்பட உள்ளன.
கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முதல் அலை ஓய்ந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட்டது.
கற்க முடியா சூழல் (Unable to learn)
கொரோனா வைரஸ் தொற்று, முதியவர்களை வீட்டிற்குள் முடக்கியதுடன், சிறுகுழந்தைகள் கல்வி கற்க முடியாத இக்கட்டான சூழலைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
தேர்வுகள் ரத்து (Cancel exams)
அதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரைத் திறக்கப்பட வில்லை. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்ட போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கட்டண வசூல் (Charge collection)
அதேபோல, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்ப வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி தனியார் பள்ளிகள் வழக்கம்போல் பள்ளிக் கட்டணங்களை வசூலித்தன.
பாலகர்களுக்கு ஏமாற்றம் (Disappointment for bridges)
அதேநேரத்தில், பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள பாலகர்கள் பலர் பள்ளிக்கு போக முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பள்ளியை மறக்கும் நிலை (Forgetting school)
இதன் காரணமாக, பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்தவரை, பள்ளிக்குச் செல்வதே மறந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக பிரைமரி, நர்சரி பள்ளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றன.
நிலுவையில் கட்டணம் (Outstanding fees)
ஏனெனில் கடந்த 2019ல் இருந்தே கல்விக் கட்டணம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெற்றோர்களிடம் 75 சதவீத கல்வி கட்டணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 25 சதவீத பள்ளிகள் கூட 75 சதவீத கட்டணத்தை பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் வாழ்விழந்து தவித்து வருகின்றன.
தவிக்கும் பள்ளி நிர்வாகம் (Suffering school administration)
இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்து நிற்கின்றன. பல பள்ளிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை கட்ட வேண்டியுள்ளது. மேலும் 50 ஆயிரம் பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி, காப்பீடு, எப்.சி, சாலை வரி உள்ளிட்டவை செலுத்த வேண்டியிருக்கிறது.
10,000 பள்ளிகள் மூடல் (10,000 schools closed)
ஏற்கனவே கல்வி கட்டணம் நிலுவையில் இருப்பதால் மேற்குறிப்பிட்ட வரிகளைச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரைமரி, நர்சரி பள்ளிகளை நம்பியிருக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்விழந்துத் தவிக்கின்றனர். எங்களின் நிலைத் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளை நடத்துவதற்கு வாங்கிய கடனை கட்ட முடியாததால் 10 ஆயிரம் பிரைமரி, நர்சரி பள்ளிகளை மூடி விடுவது என முடிவு செய்துள்ளோம். எனவே எங்கள் பள்ளிகளையும், 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களையும் அரசே எடுத்து கொள்ளட்டும். எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதனால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க...
சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?
85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!