2021- 2022 ஆண்டுக்கான பயிர் கடன் தொகையை கூடுதலாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த நிதியாண்டுக்கான பயிர் கடன் நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2021-22ம் ஆண்டுக்கான பயிர்கடன் தொகை அளவு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கடன் தொகை அளவு நிர்ணயிப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு கூட்டம் ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நெல், மரவள்ளி உள்பட தோட்டக்கலை பயிர்களுக்கான பயிர்கடன் தொகை அளவை கூடுதலாக நிர்ணயம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடந்த நிதியாண்டைவிட, வரும் 2021- 22ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும், பயிர்க்கடன் அளவுகள் கூடுதலாக நிர்ணயிப்பதற்கு மாவட்ட தொழில்நுட்பக்குழு மூலம் மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் பேசும்போது, இயற்கைவழி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து பயிர்க்கடன் அளிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பயிர் கடன் தொகையை நிர்ணயிக்கப்பட்டு ஆண்டுதோறும் தவறாமல் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை தமிழக அரசே விவசாயிகள் சார்பில் செலுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் பேசும்போது, சம்பா, தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க..
PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!
வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!