தரங்கம்பாடி பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் பருத்திச் செடிகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் புகுந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust) பயிர்களை நாசம் செய்து வருகின்ற. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்தது.
தமிழகத்தில் வெட்டுக்கிளிகள்
இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்கிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கோவை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள செடி மற்றும் பயிர்களை உள்ளூர் வெட்டுக்கிளிகள் (Grasshopper) தாக்கி நாசம் செய்து வருகின்றது.
இது குறித்து வேளாண் துறையினர் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகத்திற்குப் பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அரசும் தெரிவித்துள்ளது.
மதுரையில் நெல், பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டம்
வேளாண்துறையினர் ஆய்வு
இந்நிலையில் நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்திச் செடிகளை இரண்டு நாட்களாக, நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல், அப்பகுதியில் விவசாயி சதீஸ் என்பவர் இயற்கை முறையில் சாகுபடி செய்த பருத்தி செடிகளையும் வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளன
இதுகுறித்து வேளாண் துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் உமாபசுபதி தலைமையில் உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பாலூர் கிராமத்திற்கு வந்து வெட்டுக்கிளி தாக்குதலால் சேதமடைந்த பருத்திச் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?
உள்ளூர் வெட்டுக்கிளிகள்
இதுகுறித்து செம்பனார்கோவில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் பேசுகையில், பருத்தி செடியை தாக்கிய வெட்டுக்கிளிகள் உள்ளூர் ரக வெட்டுக்கிளிகள் தான். எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் கூறினார் செம்பனார்கோவில் வட்டார பகுதிகளில் 1,110 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது என்று தெரிவித்தார். அகார்டிராக்டின் மருந்து கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மில்லி கலந்து தெளித்தால் வெட்டுக்கிளிகள் அழிந்து விடும் என்றார்.
சாகுபடிக்காகத் தயார் நிலையிலிருந்த பருத்தி செடிகளில் வெட்டுக்கிளிகள் தாக்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
PM-KMY: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்