சமவெளி பகுதிகளில் ஊட்டி பூண்டு (Garlic) விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பூண்டு, முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக விளைச்சலை தருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு சமவெளி பகுதிகளில் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் பூண்டின் விலை குறைந்தவை அடுத்து விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
விலை குறைவு!
இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை (Harvest) செய்யப்படும் காய்கறிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று சமவெளி பகுதிகளில் விளையும் காய்கறிகள் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் டீசல் விலை உயர்ந்ததால் சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்து இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்து உள்ளது.
ஊட்டியில் ஒரு கிலோ தக்காளி ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் விளையும் ஒரு கிலோ பூண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை சமவெளி பகுதிகளில் விற்பனையானது. நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதிக பரப்பளவில் பூண்டு சாகுபடி (Cultivation) செய்தனர். தற்போது பூண்டு முதல் தரம் கிலோவுக்கு ரூ.140-க்கு விற்பனை ஆகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே பனிக்காலத்தில் பூண்டு செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். ஆனால் விலை வீழ்ச்சி அடைந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மறுபடியும் சாகுபடி
இதனால் அறுவடை செய்த பூண்டுகளை விற்று விட்டு, மீதமுள்ள பூண்டுகளை மறுபடியும் சாகுபடி (Cultivation) செய்வதற்காக விதைக்காக நன்றாக காய வைத்து எடுத்து வைக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இமாச்சல பிரதேசம், சீனா போன்ற இடங்களில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு பூண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் ஊட்டியில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு விலை குறைவாக கிடைக்கிறது. ஊட்டி பூண்டுக்கு என்று தனி மருத்துவ குணம் (Medicinal properties) இருக்கிறது என்றனர். ஊட்டியில் ஒரு கிலோ கேரட் (Carret) ரூ.20 முதல் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.30, பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40, பட்டாணி ரூ.40 முதல் ரூ.50, பீட்ரூட் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
அவசரத் தேவைக்கு சிறந்தது எது? தனிநபர் கடனா அல்லது தங்கநகைக் கடனா?