1. Blogs

அவசரத் தேவைக்கு சிறந்தது எது? தனிநபர் கடனா அல்லது தங்கநகைக் கடனா?

KJ Staff
KJ Staff
Gold Loan vs Personal Loan
Credit : Financial Express

அவசரமாகப் பணம் தேவைப்படுபவர்கள் பொதுவாக தனிநபர் கடன் (Personal Loan) அல்லது தங்கக் கடனை (Gold loan) வாங்குகிறார்கள். இவ்விரண்டு கடன்களும் விரைவில் கிடைத்துவிடும். ஆனால் இதில் எந்தக் கடனை வாங்க வேண்டும் என்பது வாங்குபவரைப் பொறுத்தது.

தனிநபர் vs தங்கக் கடன்:

இரண்டு கடன்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை அறிந்து கொண்டு அதன் பிறகு கடன் வாங்கினால் நல்லது. வாங்கிய கடனை ஒரு வருடத்துக்குள் உங்களால் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் தங்கக் கடன் சிறந்தது. ஆனால் நீங்கள் மூன்று முதல் ஐந்து வருட காலத்திற்குள் தவணை முறையில் (Installment) கடனைத் திருப்பிச் செலுத்த திட்டமிட்டால், தனிநபர் கடன் நல்ல தேர்வாக இருக்கும். பொதுவாக தங்கக் கடன்கள் 2 ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றன. அதன் பிறகு நீங்கள் கடன் காலத்தைப் புதுப்பிக்க முடியும். தங்கக் கடனைப் பொறுத்தவரை, நீங்கள் தங்கத்தை பிணையமாக வைக்க வேண்டும். வங்கிகள் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடனாக வழங்குகின்றன. ஆனால் தனிநபர் கடன் வாங்கினால் நீங்கள் எந்தவொரு பிணையும் வைக்கத் தேவையில்லை. கடனின் அளவானது உங்களது வருமானம் (Income) மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து இருக்கும். உங்களிடம் வழக்கமான வருமான ஆதாரம் இருந்தால் தனிநபர் கடன் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தங்கக் கடன் ஒரு பாதுகாப்பான கடன் என்பதால், அதன் மீதான வட்டி விகிதம் தனிநபர் கடனை விடக் குறைவாகவே இருக்கும். இது பாதுகாப்பற்ற கடன். தற்போதைய நிலையில், நீங்கள் பார்க்கும் வேலை, கிரெடிட் ஸ்கோரைப் (Credit score) பொறுத்து 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் கிடைக்கிறது. ஆனால் தங்கக் கடனை 7 முதல் 12 சதவீத வட்டியில் நீங்கள் வாங்கலாம். தங்கக் கடனைப் பெறுவதற்கு நீங்கள் வழக்கமான வருமான ஆதாரத்தை வைத்திருக்க தேவையில்லை. இல்லத்தரசிகள், மாணவர்கள் கூட தங்கத்தை வைத்துக் கடன் வாங்கலாம்.

சிபில் ஸ்கோர்:

தங்கக் கடனை நீங்கள் உங்கள் விருப்பம் போலத் திருப்பிச் செலுத்தலாம். ஆனால் தனிநபர் கடனை ஈஎம்ஐ (EMI) முறையில் மட்டுமே செலுத்த முடியும். உங்களது தனிநபர் கடனை முன்கூட்டியே மூட விரும்பினால், வங்கிகள் 5 சதவீதம் வரை அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கும். நீங்கள் தனிநபர் கடன் வாங்குவதற்கு 750க்கும் மேற்பட்ட சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். சில வங்கிகள் 700 முதல் 750 வரை சிபில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குகின்றன. ஆனால் தங்கக் கடன் வாங்குவதற்கு உங்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை.

தங்கக் கடன் வாங்குவதற்கு உங்களிடம் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (Address Proof) இருந்தாலே போதும். ஆனால், தனிநபர் கடன் வாங்குவதற்கு அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் வருமான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து எந்தக் கடனை நீங்கள் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்து கடன் வாங்கலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது SBI: முழு விவரம் உள்ளே!

சுயதொழில் தொடங்க மானியத்துடன் முத்தான மூன்று திட்டங்கள்! இளைஞர்களுக்கு அழைப்பு!

நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!

English Summary: Which is best for an emergency? Personal loan or gold loan? Published on: 20 March 2021, 08:38 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.