மாட்டுசாண எரிவாயுவை பொதுவாக கோபர்கேஸ் என்பார்கள் (GOBAR). கோபார் என்றால் இந்தி மொழியில் மாட்டுசாணம் ( COW MANURE) எனப் பொருள். இந்நிலையில் புதிதாக குஜராத்தில் தயாரிக்கும் சாண எரிவாயு பற்றியும், எரிவாயுவில் அடங்கியுள்ள மூலக்கூறுகள் குறித்தும் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
உலகிலேயே அதிக கால்நடை வளம் கொண்ட நாடு இந்தியா என்பது நாம் அறிந்ததே. வெண்மை புரட்சிக்கு அடித்தளமாக இருந்த குஜராத் மாநிலம் பனஸ் கந்தா மாவட்டத்திலுள்ள " தீசா தாரத் " பகுதி நெடுஞ்சாலையில் இந்தியாவின் முதல் கோபர்கேஸ் எரிவாயு பங்க் (BUNK) அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் போல வாகனத்தினை இயக்கிட மாட்டுச்சாண எரிவாயுவிற்கான ஒரு பங்க் அமைக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஓரு கிலோ மாட்டுச்சாண எரிவாயு விலை 72 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பெட்ரோல் மற்றும் மற்ற வாயு எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடுகையில் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுச் சாணமும், அதன் பண்புகளும்:
ஓரு மாடு சாரசரியாக 10 முதல் 12 கிலோ சாணி போடும் என்பது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். அப்படி சாணத்தை உரமாக பயன்படுத்தாமல் அதை எரிபொருள் வாயுவாக மாற்றி, பின் அதனுடைய கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம் (ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல). மாட்டுசாணமானது 80% நீரும், 20% திடப்பொருளாக இருக்கும்.
20 சதவீத திட சாணத்தில் உள்ள மூலக்கூறுகளின் அளவு:
- நைட்ரஜன்: 1.8--2.4%
- பாஸ்பரஸ்: 1- 1.2%
- பொட்டாசியம்: 0.6-0.8%
- கரிம கழிவுகள்: 50-75%
பொதுவாக இந்தியாவில் உற்பத்தியாகும் சாணத்தை முழுவதும் மீத்தேனாக மாற்ற முடிந்தால் சுமார் 30% எரிபொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
சாணத்திலிருந்து எரிபொருள் வாயு தயாரிப்பு:
தீசாதாரத் என்கிற பகுதியைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் வசிக்கும் சுமார் 150 விவசாயிகளால் வளர்க்கப்படும் 2800 பசுக்களில் இருந்து தினந்தோறும் சாணம் கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார் 40000 கிலோ சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பங்க் 3000 கியூபிக் மீட்டர் சுற்றளவு கொண்ட பசுமை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எரிவாயு நிலையமானது, கடந்த 2020 ஆம் ஆண்டில், 8 கோடி மதிப்பில் 40,000 கிலோ மாட்டுச்சாண கொள்ளளவுடன் தொடங்கப்பட்டது. மேலும், வருகிற 2025 ஆம் ஆண்டு 10 லட்சம் கிலோ கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்றினை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு அனைத்து தரப்பினரின் பாராட்டினையும் பெற்றுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் தொடர்ச்சியாக, காற்று மாசுப்பாட்டினை குறைக்கும் வகையில் புதிய கொள்கைகளை வகுத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் பசுமை எரிவாயுவின் தேவையும், உபயோகிக்கும் தன்மையும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
Read more:
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற புளுபெர்ரி- விவசாய பண்ணை அசத்தல்!
பெண்களை மையமாக கொண்டு 3 புதிய காப்பீட்டுத் திட்டம்- AIC சார்பில் அறிமுகம்!