
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவிய நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் பூரண நலமுடன் ஈவிகேஎஸ் இருக்கிறார் என பதிவிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாரகவும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை பின்னுத்தள்ளி 1,10,156 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வெற்றியடைந்து மார்ச் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
இதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த தமிழக சுகாதாரத்த்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் ஈவிகேஎஸ் உடல்நலம் குறித்து தெரிவிக்கையில், உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை என்கிற நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
ஆனால், அதே சமயம் அவருடைய அதிகாரப்பூர்வ முகப்புத்தகத்தில் ”நமது தன்மானத் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமுடன் இருக்கிறார். நலம் பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ள தலைவர் அவர்கள் சிறிது ஓய்வுக்குப் பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாக” பதிவிடப்பட்டுள்ளது.
செய்திகளில் செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை என பரவி வரும் நிலையில், முகப்புத்தக பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பூரண நலத்துடன் திரும்ப வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் தற்போது நடைப்பெற்ற தமிழக அரசின் நடப்பாண்டிற்கான பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் (2023-204) கூட்டத்தொடரில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!