1. செய்திகள்

ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TN Government's explanation regarding reduced allocation of funds for some departments

தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தை 20.03.2023 அன்று தாக்கல் செய்தது. ஊடகங்களில் சில துறைகளுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு 3,512.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 4,281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் ஒன்றிய அரசுடன் சேர்ந்து செயல்படுத்தும் 'உயர்கல்வி உதவித்தொகை' திட்டத்திற்கு சுமார் 1,107 கோடி ரூபாய் ஒன்றிய அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு ஒன்றிய அரசு இத்திட்டத்தின் வழிமுறைகளை மாற்றி, அதன் பங்கை மாநில அரசிற்கு வழங்காமல், நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கே செலுத்தும் என்று அறிவித்தது. எனவே, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கைப்பெற்று, உயர்கல்வி உதவித்தொகையை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை, ஒருவேளை நாம் சேர்த்திருந்தால், இந்த ஆண்டிற்கான ஒதுக்கீடு 4,352.19 கோடி ரூபாய் என கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:-

(i) அண்ணல் திட்டம் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்- 100 கோடி ரூபாய்

(ii) புதிரை வண்ணார்கள் நல வாரியம் - 10 கோடி ரூபாய்

(iii) அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் – ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்

(iv) மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதிகள் - 100 கோடி ரூபாய்

(v) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.

எரிசக்தித் துறை:

எரிசக்தித் துறைக்கு 2023-24 ஆம் ஆண்டில் 10,693.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 19,297.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022- 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு மானியமாக 13,108.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு குறைந்துள்ளது. எனவே, இழப்பு மானியத்திற்காக, 2023-24 ஆம் ஆண்டில் 1,523.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது இந்த அரசின் திறமையான மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஊரக வளர்ச்சித் துறை:

ஊரக வளர்ச்சித் துறைக்கு 2023-24 ஆம் ஆண்டில் 22,561.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022- 23 ஆம் ஆண்டில், 26,647.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டில், உயிர் நீர் இயக்கத்திற்கு (ஜல் ஜீவன்) 3,000 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படுத்துகிறது என்பதால், 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்கு நேரடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதை இரண்டும் கருத்திற்கொண்டால், இந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட அதிகமாக, 29,161.76 கோடி ரூபாய் என இருந்திருக்கும். அதாவது, 9.44 சதவீதம் அதிகமாக இருந்திருக்கும்.

எனவே இந்த வரவு-செலவுத் திட்டம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளோருக்கும் நலிவுற்றோருக்கும் பெருமளவில் பயனளிக்கும் வரவு-செலவுத் திட்டமாக அமைந்திருக்கிறது என ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்- விவாதிக்கப்படும் கருப்பொருள் என்ன?

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் என்ன?

English Summary: TN Government's explanation regarding reduced allocation of funds for some departments Published on: 22 March 2023, 10:32 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.