கோடை மழையால் பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு இந்த ஆண்டு உற்பத்தி மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் பருத்தி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் புதுச்சேரி அரசு மகசூல் இழப்பிற்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியாரால் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கு குறைந்த விலையே கிடைக்கும் நிலையில், பூச்சித் தாக்குதல் சம்பவமானது மேலும் விவசாயிகளின் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
மாவு மற்றும் அசுவினி பூச்சி பூச்சிகள் பருத்தி விளைச்சலின் அளவையும் தரத்தையும் பாதித்துள்ளன என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ”ஏற்கெனவே சந்தையில் பருத்தியின் தேவை குறைவாக இருப்பதால் கொள்முதலும் குறைந்த விலைக்கே செல்கிறது. தற்போது பூச்சி தாக்குதலினால் பருத்தியின் தரமும் குறைந்ததால் ஒரு கிலோ பருத்தியின் விலை 50 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில் காப்பீட்டுத் தொகையை விரைவுபடுத்தி, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று விவசாயிகளின் பிரதிநிதி பி.ஜி.சோமு தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், காரைக்காலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு பரப்பளவில் சுமார் 1,200 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. பருத்தியின் தேவை குறைந்துள்ளதால் சராசரி விற்பனை விலை ரூ.90-ல் இருந்து ரூ.65- வரை சரிந்துள்ளது.
பருவமழை பொய்த்ததால், காய்கள் உருவாகும் காலத்தில் பூச்சிகள் பயிர்களை தாக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த ஆண்டு பூச்சிகள் அதிகம் இல்லை என்று குறிப்பிட்ட வேளாண் துறை அதிகாரிகள், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பருத்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.
"விவசாயிகளுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த நிபுணர்களின் பரிந்துரைகளை நாங்கள் வழக்கமாக வழங்குகிறோம்.
விவசாயிகளுக்கு அறுவடைக் கூலி அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் விலை குறைந்துள்ளது.இதனால் இழப்பின் தன்மை அதிகரித்துள்ளது" என்று வேளாண் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நஷ்டமடைந்த பருத்தி விளைச்சலுக்கு காப்பீடு வழங்க வலியுறுத்தி உள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர்க் காப்பீடு நிலுவையில் உள்ளது எனவும் அரசு அறிவித்த கடன் தள்ளுபடிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் எடுத்துரைத்துள்ளனர். மேலும் பழைய கடன்கள் நிலுவையில் உள்ளதால் புதிய சாகுபடியினை மேற்கொள்வது கேள்விக் குறியாகியுள்ளது.
இதனிடையே, “எங்கள் பருத்தி சாகுபடி லாபமில்லாமல் உள்ளது. புதுச்சேரி அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பழைய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடன்களைப் பெற உதவுங்கள்" என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ஆஸ்கர் தம்பதியை நம்ப வைத்து ஏமாற்றினாரா இயக்குனர்? அதிர்ச்சி தகவல்
45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி