அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க நள்ளிரவு முதல் தமிழ்நாடு அமைச்சர்கள் வருகை தந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைத் தந்துள்ளார்.
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டிலும், தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்திலும் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்த நிலையில், அமைச்சரை கைது செய்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கையில், திடீர் நெஞ்சுவலியால் அமைச்சர் துடித்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைப்பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலன் குறித்து விசாரிக்க நள்ளிரவு முதலே அமைச்சர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், "தொடர்ச்சியாக 24 மணி நேரம் விசாரணை செய்து சித்ரவதை செய்துள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல், திட்டமிட்டு செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில்,”ஐசியூவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுய நினைவில்லை, மேலும் நான்கு ஐந்து முறை கூப்பிட்டும், அவர் கண் திறக்கவில்லை, காது பக்கம் வீக்கம் உள்ளது” என்றும் தெரிவித்தது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அமைச்சர்களை தொடர்ந்து, ஒமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வருகைத்தந்து செந்தில்பாலாஜியின் உடல்நலன் குறித்து முதல்வர் நேரில் கேட்டறிந்தார். “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது” என தனது செய்திக்குறிப்பில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி கைது குறித்து திமுக செய்துள்ள மேல்முறையீடு மனு மீது இன்று மதியம் 2:30 மணியளவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. கைது குறித்து முறையான எந்த தகவலும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை என அந்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் மீதான கைதுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அமலாக்கத்துறை முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 11 மணியளவில் சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் பாராட்டு- செய்த சாதனை விவரம்!